Wednesday, May 1, 2024

பார்வை வேண்டும் - சுவி. பாபு T தாமஸ்!

 


பார்வை வேண்டும் – சுவி. பாபு T தாமஸ்!

 

இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். யோவான் : 9 : 3

 

இயேசு கிறிஸ்து அப்புறம் போகையில் பிறவிக் குருடனான மனிதன் ஒருவனை காண்பித்த அவருடைய சீஷர்கள், ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாகத் தான் மேலே கூறிய வார்த்தைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுத்துவதை அறியமுடிகிறது. அப்படியானால் இதன் கருத்தில் உள்ள சூட்சமத்தை சற்றே கூர்ந்து கவனிப்போம். அங்கக் குறைவுகளோடு பிறப்பது என்பது பொதுவாக கொடுமையானது என்றே கொள்ளவேண்டும், குறிப்பாக அங்கக் குறைவோடு பிறந்தவருக்கும், அந்த நபரை சார்ந்தவருக்கும் வாழ்க்கை மிகக் கொடுமையானது என்று நாம் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட மன நிலையோடு இருக்கும் மக்களுக்கு கர்த்தர் சொல்லும் ஆறுதலான ஒரு உண்மைச் செய்தி என்னவென்றால், தேவனுடைய கிரியை அங்கக் குறையோடு வாழ்பவர்கள் மூலமாக வெளிப்படும் பொருட்டே அப்படி அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த வார்த்தையாகிய வேதாகமத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார். இது ஏதோ முகஸ்துதிக்கான வெறும் வேற்று வார்த்தைகளன்று, மாறாக உண்மையின் வெளிப்பாடும் என்று அறுதியீட்டு இங்கே சொல்லமுடியும் என்பதை ஒரு சான்று மூலம் பார்க்கலாம்.

 

யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். லூக்கா : 1 : 5 – 7. இந்த சகரியாவும் எலிசபெத் தம்பதியினர் தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளின் படி வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். இவர்கள் வயது சென்ற முதியவர்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. அதே நேரத்தில் எலிசபெத் மலடியாய் இருந்தப் படியினாலே அவர்களுக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்று பார்க்கிறோம். ஏன் அவர்களுக்கு பிள்ளையில்லை? வசனம் சொல்லுகிறது அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். அப்படியானால் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக வாழ்ந்த தம்பதிக்கு ஏன் இந்த நிலைமை என்று நாம் சிந்திக்க வேண்டுமல்லவா! தேவன் மகிமைப் பட தேவ திட்டம் வெளிப்பட யோவான் ஸ்நானகன் அவர்களுக்கு பிள்ளையாய் பிறக்க இந்த தம்பதி வெகு காலம் காக்க வைக்கப் பட்டார்கள் என்பது விளங்குகிறதல்லவா. ஆனால் அதுவரை அவர்களுக்கு எத்தனை அவமானங்கள், கண்ணீர், ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணிப் பாருங்கள். எனினும் அவர்கள் மூலமாக தேவன் மகிமைப் பட்டார். அவர் கூறிய வார்த்தையின் உண்மைத் தன்மையை நாம் அனைவரும் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் உணர்ந்துக் கொள்ளுவது மிகவும் அவசியம். தேவனுடைய மகிமை வெளிப்படுவதற்கான வாய்ப்புக்கள் பரிப்பூரணமாக பிறந்தவரை காட்டிலும் அங்கக் குறைவோடு பிறந்தவருக்கே அதிகம் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 

செய்ய வேண்டியது யாவை :

 

மூன்று மிக முக்கியமான காரியங்களில் அங்கக் குறைவுள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டும். 1. கூப்பிட வேண்டும் அல்லது அவரை நோக்கிப் பார்க்கவேண்டும் 2. வெறுமையாக்கவேண்டும் அல்லது தாழ்த்த வேண்டும் 3. அர்ப்பணிக்க வேண்டும் அல்லது தேவையை தெரியப்படுத்த வேண்டும். இந்த மூன்றுக் காரியங்களில் ஒருவர் சரியாக கவனம் செலுத்தினால் கைமேல் பலன் என்பது நிச்சயம். இதற்கு சான்றாக ஒரு சம்பவம் பரிசுத்த வேதாகமத்தில் பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது. அதை இப்பொழுது சற்று விரிவாக பார்ப்போம். எரிகோ என்கிற பட்டணத்திற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் வந்தார்கள். இயேசு கிறிஸ்துவை காண திரளான ஜனங்களும் வந்தார்கள். அங்கே தீமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற குருடன், வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். பர்திமேயு என்பவன் குருடனாக இருந்தப் போதிலும், அங்கு நடக்கும் சங்கதிகளில் அதிக கவனமாக இருந்தான். வந்திருக்கிறவர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? ஆவரால் நடக்கும் அற்புதங்கள் என்ன? போன்ற அனைத்தையும் கேட்டவனுக்கு தனக்கும் பார்வையடைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆகவே அவன் துரிதமாக செயல் பட்டான்.

 

அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். மாற்கு : 10 : 47 – 48.

 

ஆண்டவாராகிய இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீஷர்களும் எரிகோவை விட்டு புறப்பட்டு விட்டார்கள். அதை அறிந்தவன் துடிக்கிறான், இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணுகிறான். அவர் போகும் பாதையின் திசையில் திரும்பி அதிகமாக சத்தமிட்டு இயேசுவே, தாவீதின் குமாரனே என்று உரக்க கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். நான் ஒரு குருடன், எனக்கு யார் உதவுவார்கள் என்று எண்ணி கலங்க வில்லை. இயேசுவும் அவராக வந்து சுகமாளிக்கவும்  இல்லை, என்றாலும் இந்த பர்திமேயு என்கிற குருடன் விடுவதாக இல்லை.

 

இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். மாற்கு : 10 : 49.

 

அவன் கூப்பிட்டான் இயேசு நின்றார், அவனை அழைத்தார். இந்த உண்மையை புரிந்துக் கொள்ள வேண்டும். அவர் நின்று அழைக்கும் வரை நாமும் விடவேக் கூடாது. நம்மில் பெரும் பாலானவர்கள் அப்படிச் செய்வதே இல்லை. கூப்பிட்டோம், பார்த்தோம், அடுத்த காரியம் என்று நம் பாதைகளை மாற்றிக்கொண்டு பயணக்க தொடங்குவது பெரும்பாலானவர்களின் வழக்கம். ஆனால் இந்தக் குருடனோ ஒரு வேளை அன்று தான் அவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கக் கூடும் அல்லது சிலக் காலம் இவருக்காக காத்திருந்தவனாக இருந்திருக்க வாய்ப்பும் இருக்கிறது. எது எப்படி இருப்பினும் விடாப்பிடியாக அவனால் இயன்ற மட்டும் குரலை உயர்த்திக் கூப்பிட்டான், காரணம் அவன் இயேசு இன்னார் என்று நன்கு அறிந்திருந்தான். இப்பொழுது இந்த பர்திமேயு எனும் குருடனானவன் செய்ததை கவனிக்க வேண்டும்.

 

உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். மாற்கு : 10 : 50

 

அங்கே சகரியாவும் எலிசபெத்தும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். அதேப் போல இவனும் தனது பழைய வாழக்கையாகிய கறைகளை உடனடியாகத் துறந்தான் என்று பார்க்கிறோம். அப்பொழுது தான் அவனால் இயேசுவின் முன்னால் வந்து நிற்க முடிந்தது. நாமும் அதை செய்ய முற்பட முயல வேண்டும்.

 

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய
 கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
ஏழாம்நாளோ உன் தேவனாகிய
 கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
கர்த்தர்
 ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. கொலை செய்யாதிருப்பாயாக. விபசாரம் செய்யாதிருப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். யாத்திராகமம் : 20 : 3 – 17.

 

ஆக இந்த ஒழுக்கங்களுக்குள் நம்மை உடப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது நாமும் தேவனை தரிசிக்க முடியும். பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது, பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்கவே முடியாது. ஆகவே பரிசுத்த வாழ்க்கைக்கு நேராக நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவது மிக மிக அவசியம். இப்பொழுது பர்திமேயுவை பார்த்து இயேசு கேட்கிறார்,

 

இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். மாற்கு : 10 : 50

 

தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். லூக்கா : 1 : 37 என்று நாம் நம்ப வேண்டும். அது மாத்திரமல்ல, பவுலும், பர்னபாவும், அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள். லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். அப்போஸ்தலர் : 14 : 7 – 10. சுகம் பெற வேண்டுமானால் இரட்சிப்பிற்கேற்ற விசுவாசம் மிகவும் முக்கியம். எனவே தான், இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான். மாற்கு : 10 : 52. பார்வை அடைந்தவன் அவருக்கு பின் சென்றதாலே அவனுடைய பெயர் வேதாகமத்தில் காணப்படுகிறது. கேட்கிற எவரும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

 

பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். லூக்கா : 11 : 5 – 10.

 

எனவே, நம்பிக்கையோடு கேளுங்கள் அப்பொழுது நம் குறைகள் நிறைவாக பெற்றுக்கொள்ளுவோம் என்பது திண்ணம், ஆமென்  நன்றி.

 

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள் – மதுரை.  

 

 

 

 

 

  

  

 

  

  

      

 

May First!