Saturday, March 2, 2024

செவி கொடுக்கும் கர்த்தர்! சுவி. பாபு T தாமஸ்


 

செவி கொடுக்கும் கர்த்தர்! சுவி. பாபு T தாமஸ்

 

என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் : 120 : 1

 

இந்த 120வது சங்கீதம் முதல் 134ஆம் சங்கீதம் வரை இருக்கும் 15 அதிகாரங்களுக்கு ஒரு விசேஷம் இருக்கிறது. அது என்ன வென்றால், இந்த சங்கீதம் அனைத்தும் ஆரோகண சங்கீதம் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. இந்த அதிகாரங்களுள் தாவீது பாடின ஆரோகண சங்கீதம் மற்றும் சாலொமோன் பாடின ஆரோகண சங்கீதமும் அடங்கும். பிற ஆரோகண சங்கீதங்களுக்கு ஆக்கியோனுக்கான குறிப்பு காணப்படவில்லை. சரி, ஆரோகண சங்கீதம் என்றால் என்ன வென்று பார்ப்போம். இந்த ஆரோகண சங்கீதம் என்பது Psalms of Ascent அதாவது எருசலேம் தேவாலய புனித யாத்திரை பாடல் அல்லது ஏறுவரிசை பாடல் என்று பொருள் கொள்ளும் பாடல்கள் இவை என்று வேதாகம ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார் நம்புகின்றனர்.

 

வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். உபாகமம் : 16 : 16 ன்படி ஆண் மக்கள் அனைவரும் தேவனை தரிசிக்க எருசலேம் தேவாலயம் வர வேண்டும் எனும் கட்டளைக்கு இணங்க இஸ்ரவேலர்கள் எருசலேம் செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அப்படி அவர்கள் எருசலேம் தேவாலயத்திற்கு போக மலை மீது ஏறும்போது கரடு முரடான பாதையின் அலுப்பு தெரியாமல் இருக்கவும், தேவனை தரிசிக்கும் ஆயத்தங்களோடு பாதையை கடக்கவும் இஸ்ரவேல் மக்கள் பாடிய இந்த சங்கீதங்கள் தான் ஆரோகண சங்கீதங்கள் எனப்படுகிறது.

 

இப்போழுது வசனதிற்கு வருவோம், சங்கீதக்காரன் தந்து பாடலில் என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். சங்கீதம் : 120 : 1 என்று பாடுவதை வசனம் நமக்கு வெளிப்படுத்துகிறது. மனிதர்களுக்கு உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று நாம் அறிந்திருக்கிறோம். பல வாரான உபத்திரவங்களை மனிதன் கடந்து வர வேண்டியது அவசியம். உபத்திரவம் இல்லாத வாழ்க்கை மிக அபூர்வம். ஆகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உபத்திரவங்களை மேற் கொள்ளுவத்தை குறித்த அவசியத்தை உறுதிப் படுத்துகிறதை நாம் வசனத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

 

என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் : 16 : 33.

 

ஆகவே உபத்திரவம் என்பது அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வருவது தவிர்க்க முடியாது. நாம் உபத்திரவங்களை கடந்து வருவது அவசியம். இன்னும் சொல்லப்போனால் உபத்திரவம் நல்லது என்றும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் உபத்திரவத்தை குறித்து மேன்மை பாராட்டுவதை நாம் அறிய முடிகிறது. அது மாத்திரமல்ல உபத்திரவங்களால் வரும் அனுகூலங்கள் குறித்தும் வசனம் நமக்கு வெளிப்படுத்துவதை காண முடிகிறது. 

 

அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் : 5 : 3 – 4.

 

படிக்கிற பிள்ளைகள் பல்வேறு உபத்திரவங்களை கடந்து பிரயாசம் எடுத்து, தியாகங்கள் பல புரிந்து தேர்வு எழுதினால் தான் பட்டங்கள் பெற முடியும். கஷ்டமில்லாமல் வரும் பலனுக்கு மதிப்பில்லை என்றும் நாம் அறிவோம்.  சங்கீதக்காரனும் உபத்திரவத்தை குறித்து கூறுவதை வசனம் தெளிவு படுத்துவதை பாருங்கள்.

 

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். சங்கீதம் : 119 : 71.

 

ஆக உபத்திரவத்தில், அதினால் ஏற்படும் நெருக்கங்கள் என்பது தவிர்க்க முடியாது எனினும், அதை கடப்பது உண்மையில் கடினம் தான். இக் கடினமான சூழல்களில் நமக்கு உதவிச் செய்யவே கர்த்தர் நமக்கு இருக்கிறார். அத் தருணங்களில் நமக்கு அடைகலமும், ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையாக இருப்பது கர்த்தர் மட்டுமே.

 

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் : 46 : 1.

 

இதை தான் சங்கீதக்காரன் தந்து வாக்கியத்தில் உறுதிப்படுத்துகிறார் என்பது முக்கியம். அதாவது நெருக்கமான சூழ்நிலையில், கர்த்தரை நோக்கி கூப்பிட்ட வேளையில், கர்த்தர் செவிக் கொடுத்து பதில் தந்தார் அல்லது விடுவித்தார் என்று தெரியப்படுத்துகிறார். இந்த அனுபவம் நம் அனைவருக்கும் வரவேண்டும் என்பது வசனம் நமக்கு உணர்த்தும் உண்மையாகும். ஆனால் பெரும்பாலானவர்களின் அனுபவம் என்பது ஜெபத்திற்கு பதில் கிடைப்பதில்லை என்பதாகும். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தர் நம் கூப்பிடுதலுக்கு செவிக் கொடுக்க வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான மூன்று காரியங்களை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

1.   தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்கிற அறிவு நமக்கு வேண்டும்.

2.   தேவனிடத்தில் நம்பிக்கை / விசுவாசம் நமக்கு வேண்டும்.

3.   தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை கைக்கொள்ளுகிறவர்களாக நாம் மாறவேண்டும் அல்லது வாழவேண்டும்.    

    

     தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்?

அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். ஓசியா : 6 : 3

பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். ஓசியா : 6 : 6

 

முதலாவது நமக்கு தேவை, தேவனை அறியும் அறிவும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புனித தோமா அவர்கள் கடல் கடந்து இந்தியா வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை நமக்கு போதித்தார். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஈனச் சிலுவையில் தனது தூய இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக்கொண்டார் என்ற உண்மையை நாம் அறிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவர் பிறப்பு, ஊழியங்கள், செய்த தியாகங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த பூமியில் பிறந்தார்? மனுக்குலத்திற்காக அவர் செய்த தியாகம் என்ன என்ற குறைந்த பட்ச புரிதலாவது நமக்கு வேண்டும். இரண்டாவது நமக்கு தேவை, அவர் மீது நாம் கொண்ட விசுவாசம் அல்லது நம்பிக்கை. அந்த விசுவாசம் என்பது ஆழமானதாகவும், உறுதியானதாகவும் இருப்பது அவசியம்.

 

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. மாற்கு : 12 : 30.

 

ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். ரோமர் : 10 : 17

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.எபிரெயர் : 11 : 1, 6

 

மூன்றாவது நமக்கு தேவையானது என்னவென்றால், அவருடைய வார்த்தைக்கு செவி கொடுப்பது ஆகும். இந்த மூன்று காரியத்தில் நாம் வளரும் போது நம்முடைய அனுபவமும் வேறாக இருக்கும் என்பதில் நமக்கு ஐயம் தேவை இல்லை.

     

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் : 4 : 12.

 

  நான் என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு   செவிக் கொடுத்தார், எல்லா நெருக்கத்திலிருந்தும் விடுவித்தார் என்பதாக நமது அனுபவம் மாற வேண்டும், மாறும் என்பதில் நமக்கு எள்ளளவும்சந்தேகம் வேண்டுவதில்லை.ஆமென்.

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், மதுரை – 625 107.

 

 

 

   

  

 

 

 

No comments:

Post a Comment