Wednesday, October 22, 2025

யார் எனக்கு தலைவன்! சுவி.பாபு T தாமஸ்

 


யார் எனக்கு தலைவன்!

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ஒட்டு மொத்த அறிவு சார் சமூகத்துக்கும் வளர்ந்த நவ நாகரிக சமூகத்திற்கும் ஒரு கருப்பு நாள் என்றால் அது மிகை அல்ல. ஆம் அன்றைய தினம் ஒரு பிரபல நடிகரை காண பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி, இயற்கை உபாதைகளை கழிக்கவோ, நிழலுக்கு ஒதுங்கவோ ஏதுமின்றி மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடிக்க மக்கள் நெரிசலின் காரணமாக சிறுவர்கள், பிள்ளைகள் மற்றும் பெண்கள் ஆண்கள் என்று 41 விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோனது மாத்திரமல்ல நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவ சிகிழ்சை பெறுமளவுக்கு மிகப்பெரிய விபத்து
கரூரில் நடைபெற்றது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தார்கள், தங்கள் சொந்த வீட்டில் ஏற்பட்ட பெரும் இழப்பாக கருதி வருந்தினார்கள்.
இவ்விழப்பு ஏன் நடந்தது? சற்றே நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு ஒரு இரண்டு சம்பவங்களை முன்வைக்க விரும்புகிறேன். 1. ஒரு இளம் வயதை ஒத்த நபர் ஒருவர், கரூர் மக்கள் நெரிச்சலில் பெரும் இழப்பை சந்தித்த அந்த நபர் கண்ணீரோடு தெரிவித்த கருத்து மற்றும் கைபேசியில் பதிவான உரையாடலில், அந்த நபர் தன் மனைவியை கைபேசியில் அழைத்து எச்சரித்திருக்கிறார். " கூட்டம் அதிகமாக இருக்கிறது, மகள் எப்படி தாங்குவாள், வந்து விடுங்கள்" என்று கூறிய கணவருக்கு மனைவியின் பதில் "நாங்கள் விஜய்யை பார்க்காமல் வரமாட்டோம் மாமா, நீங்களே சாப்பாட்டை போட்டுகொண்டு சாப்பிடுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார். மீண்டும் அழைத்தப்போது காவலர் ஒருவர் மறுமுனையில் இருந்து அந்த நபரை மருத்துவமனைக்கு வருமாறு அழைக்க அங்கே இருவரும் அகால மரணம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் தெரிவித்தது என்னவென்றால், அதே மாதத்தில் அவர்களது இளைய மகளை அவரின் சுகவீனத்தின் காரணமாக மருத்துவர்கள் சிகிழ்சை அளித்தும் பலனளிக்காமல் மரணித்த ரணம் ஆறுவதற்குள் மனைவி மற்றும் தன் முத்த மகளை இப்படி அநியாயமாக
இழந்து விட்டேன். இனி நான் யாருக்காக வாழவேண்டும் என்று ஆற்றொண்ணா துயரத்துடன் கண்ணீர் மல்க நின்ற அவருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்.
2. ஒரு இளம் தாய் பேட்டி ஒன்றில் விஜய் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர், கில்லி மற்றும் ஒரு திரைப்பட பேரை சொல்லி அவரை போல் யாரும் இருக்க முடியாது. எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும், என் மகனுக்கு அவருடைய தந்தையைவிட விஜய் மீது அபாரமான பாசம். அவரை விஜய் என்று சொல்லுவதை கூட விரும்பமாட்டான், தளபதி என்று தான் அழைப்பான். அவர் குறைந்த பட்சம் எதிர் கட்சி தலைவராக அமருவார். அவர் முதலமைச்சராக வரும் பொழுது வேளாங்கண்ணியில் நான் தலை மொட்டை அடித்துக் கொள்ளுவேன், இது என் பிரார்த்தனை. இது போல ஏராளாமான காட்சிகள் வளம் வந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் சிந்திக்க வேண்டும், ஒரு தலைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாத ஆட்டுமந்தை கூட்டம், அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஒரு புறம் ஈடு செய்ய முடியாத இழப்பு, மறு புறம் அறியாமையில் மக்கள். ஒரு பெரும் சமூகமே அறியாமையிலும், மடமையிலும் சிக்கி இருப்பது 21 நூற்றாண்டின் கொடுமை. திருவாளர் விஜய் அவர்கள் ஒரு நல்ல நடிகர், அது அவரின் தொழில். ஒரு நடிகர் தலைவராக முடியாது என்று சொல்லவில்லை. நிச்சயம் ஒரு தலைவருக்கான தகுதியுடைய யாரும், அவர் எப்பேர்பட்ட பின் புலத்திலிருந்து வருபவராக இருந்தாலும் அவர் தலைவராகலாம் இதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தலைவருக்கான தகுதி ஒருவருக்கு மிக மிக அவசியம். ஒரு தாய் தன் பிள்ளை தனது கணவனை / பிள்ளையின் தகப்பனை கனவீனப்படுத்துகிறான் என்று புரியாத தாயால் எப்படி ஒரு தலைவனை அடையாளம் காண முடியும். பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது 'உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக' இது கடவுளின் கட்டளையில் ஒன்று. பெற்றோர் தான் பிள்ளைக்கு வழிகாட்ட வேண்டும்.
பிள்ளைக்கு நடிகர் விஜய் பிடிக்கும் என்பதற்காக அவர் தலைவராகிவிடுவாரா? தனது தொழில் காரணாமாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப வேஷம் மாறும் ஒருவர் தலைவர் எனும் அந்தஸ்தை பெறுவது சாத்தியமா? சரி இப்படி சிந்திப்போம், நடிகர் விஜய் ஹிரோ எல்லோருக்கும் பிடிக்கும் பண்புகளில் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். அதே விஜய் அவர்கள் வில்லன் பாத்திரம் ஏற்று காலித்தனம் செய்வது போல் நடித்திருந்தால் விஜய் அவர்களை தலைவராக கொண்டாடுமா? இந்த சமூகம். ஒருவரின் தொழில் வேறு, அவரின் இயல்பு என்பது வேறு. தலைமை பண்பு கொண்ட ஒருவர் நடிகராகவோ அல்லது வேறு பல தொழில் / பணிசெய்பவராக இருக்க முடியும்.
அதே நேரத்தில் தலைமை பண்புள்ளவருக்கென்று தனி இலக்கணம் உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தலைமை பண்புகளின் மொத்த உருவமாகவே இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்தார். அவர் நமக்கு மாதிரியை வெளிப்படுத்தி இந்த பூமியில் வாழ்ந்தார். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். யோவான் : 13 : 15. ஒரு தலைவனின் முதல் தகுதி என்பது, சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் சமமாக பாவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நல்லத் தலைவன் என்பவன் ஒரு நல்ல வழிக்காட்டி, முன்யோசனையும், தொலைநோக்குப் பார்வை கொண்டவானால் மட்டுமே தலைவனாக சோபிக்க முடியும். தியாக உள்ளமும் இரக்க மனப்பான்மை கொண்டவனே நல்லத் தலைவன். மக்களோடு மக்களாக வாழ்ந்து கேள்வி ஞானத்தோடு சிந்தித்து செயல்படுபவன் நல்ல தலைவனுக்கு தகுதியுள்ளவர். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment

Jesus Christ!