Monday, November 13, 2023

ஜாதிப் பெருமைகள் சாவது எப்போது? சுவி.பாபு T தாமஸ்

 

ஜாதிப் பெருமைகள் ஒழிவது எப்போது? சுவி.பாபு T தாமஸ் 


மனிதருக்குள் ஜாதி பாகுபாடு என்பது குறிப்பாக இந்தியாவில் மிக அதிகம், அதே போல் ஜாதி பாகுபாட்டால் ஏற்படும் பாதிப்பும் இங்கு அதிகமே. வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு ஜாதி பார்ப்பது, ஜாதிய அடக்குமுறைகள், வேற்றுமைகள் என்பது போன்ற கொடுமைகள் எல்லா நிலைகளிலும் தங்கு தடையின்றி காணப்படும்  அவல நிலை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. எனினும் இதை களையவேண்டும் என்று கொள்கை ரீதியாக பலர் ஒப்புக்கொள்ளத் தான் செய்கிறார்கள். ஆனால் மனதளவில் அல்லது அதை செயல்படுத்தும் போக்கில் மட்டும் நடைமுறை சாத்தியம் என்பது  மிகக் குறைவு என்றெ நினைக்கத் தோன்றுகிறது. இன்னமும் ஜாதிக் கொடுமைகள், பாகுபாடுகள் பல இடங்களில் இயல்பாக நடந்த வண்ணம் தான் இருக்கிறது. அதனால் பல சமூகங்கள், குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதோடு, மனித இழப்புக்களும் நிறையவே நடந்த வண்ணம் இருக்கிறது, என்றாலும் மாற்றத்திற்கான வழி மட்டும் கானல் நீராக, தொலை தூரக் கனவாகப்  மறைந்து  விடுகிறது. இது பொதுவான நிலைபாடு எனினும் கிறிஸ்தவம் ஜாதி பேதங்கள் குறித்து என்ன சொல்லுகிறது. கிறிஸ்தவர்கள் இந்தக்கருத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி வரும்போது அவர்களும் ஜாதி பாகுபாட்டை ஆதரிக்கிறவர்களாகவும், வரவேற்கிறவார்களாகவும் இருப்பது கவலையளிக்கிறதாக இருக்கிறது. இந்த ஐயத்திற்கான  காரணம் கிறிஸ்தவ மார்க்கம் ஜாதிப் பாகுபாட்டை ஆதரிக்கவில்லை மாறாக எதிர்க்கிறது என்பது தான் உண்மை. இந்த உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமானால் கிறிஸ்தவ மார்க்கத்தை நாம் சற்று புரட்டி பார்க்க வேண்டும் அல்லது ஆழ ஊடுருவிப் பார்ப்பது அவசியம். கிறிஸ்தவத்திற்கு அடிப்படை இயேசு கிறிஸ்து என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இயேசு கிறிஸ்து ஒரு யூதர் என்பதும் அனைவரும் அறிந்தது தான், என்றாலும் இயேசு கிறிஸ்து யூத மார்க்கத்தையும் அதன் அடிப்படைகளையும் எதிர்ப்பவராகவே இருந்தார், இதற்கு முக்கிய காரணம் அவர்களின் மாறுப்பாடான சித்தாந்தம். இதற்காகத் தான் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை வெறுத்தார்கள், காட்டிக்கொடுத்தார்கள், சிலுவையிலும் அறைந்தார்கள் என்பது வரலாறு. 

ஆனால் இந்த உண்மையை உணராத பலர் இயேசு கிறிஸ்து ஒரு யூதர் என்று சொல்லி ஜாதி பாகுப்பாட்டை ஆதரிக்கும் ஒரு கூட்டம் கிறிஸ்தவத்திற்குள்ளும் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.  தேவனாகிய கர்த்தர் ஆதியிலே பக்தியுள்ள ஜனக்கூட்டத்தை உருவாக்க விரும்பினார். அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படி தானே. மல்கியா : 2 : 15.  அதற்காக மனுஷனை பூமியிலே உருவாக்கினார். "நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்". ஏசாயா : 45 : 12. ஆனால் ஆதி மனுஷனாகிய ஆதாம் விழுந்துப்போனான் தனக்கு துணையாகக் கொடுத்த ஏவாளினால், இங்கே தேவ திட்டம் தடைப்பட்டது. தேவனாகிய கர்த்தர் தொடர்ந்து நோவாவை தெரிந்துக்கொண்டு அவன் மூலமாக தேவ பக்தியுள்ள சந்ததியை பெற்றெடுக்க விரும்பினார். அதற்காக உலக முழுவதும் மிகப்பெரிய பிரளயத்தால் அழிக்கப்பட்டப் போதும் தேவன் நோவாவையும் அவன் குடும்பத்தை மாத்திர பிரளயத்திலிருந்து அவர்களை காப்பாற்ற நோவாவைக் கொண்டு ஒரு பேழையை செய்யச்சொல்லி, அவர்களை பாதுகாத்தார். பிரளயத்திற்குப் பிறகு நோவாவின் குடும்பத்தால் உலத்தை நிரப்பினார். "பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன". ஆதியாகமம் : 9 : 1 - 2.

பாருங்கள், நோவா தேவனோடு சஞ்சரிக்கிறவானாக பக்தியுள்ள மனுஷனாக வாழ்ந்து வந்தான். நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் : 6 : 9. ஆனால் பிரளயத்திற்குப் பின் தொடர்ந்து நோவாவினால் அப்படியே வாழமுடியாமல் போனது. இது நோவாவின் காலத்திலேயே தொடங்கினதாக பரிசுத்த வேதாகமம் பதிவுச் செய்கிறது. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். ஆதியாகமம் : 9 : 20 - 21. ஆக நோவாவினால் தொடர்ந்து தன் உத்தமத்தில் வாழ முடியாமல் விழுந்துப் போனான். ஆனால் தேவனோ பக்தியுள்ள சந்ததியை உருவாக்க ஒரு மனுஷனை தேடிக்கொண்டே இருந்தார். இப்பொழுதும் அப்படியே தேடிக்கொண்டுமிருக்கிறார். அவ்வாறு தேடும் போது கண்டெடுக்கப்பட்டவன் தான் ஆபிரகாம். இந்த ஆபிரகாம் தன் ஜென்ம பூமியாகிய ஊர் என்னும் கல்தேயர் தேசத்துப் பட்டணத்தை சேர்ந்தவன். அது இன்றைய ஈராக் தேசம். ஆபிரகாம் யூதனுமல்ல, அவன் கானான் தேசத்தானுமல்ல. இது பரிசுத்த வேதாகமம் சொல்லும் சரித்திரம். ஆனால் யூதக் குலம் ஆபிரகாமிற்குப் பின் வந்த சந்ததியினரை அவ்வாறு மக்கள் அழைத்தார்கள். அதேப் போல இன்றைய கானான் தேசம் தேவனால் ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்டு பின்னாளில் ஆபிரகாமின் சந்ததியினருக்கு கொடுக்கப்பட்டது தான் இன்றைய இஸ்ரவேல் என்னும் பாலும் தேனும் ஓடுகிறதான நல்ல தேசம். 

சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டான பின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்து போகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். ஆதியாகமம் : 15 : 12 - 21. அதேப் போல இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தைப் பெற்று சுவிஷேத்தை உலகின் பெரும் பகுதிகளுக்கு சென்று இயேசு கிறிஸ்துவின் அன்பை விதைத்த அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிரூபத்தில், நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனை பேரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் :3 : 26 - 29. 

இப்படிப் பட்ட தெளிவான போதனைகளை பெற்று கிறிஸ்துவை பின் பற்றுகிற நாம் உலகத்திற்கு முன்மாதிரியாக வாழாமல், உலத்தை போலவே ஒத்த வேஷம் தரித்தவர்களாய் வாழ்வது எத்துணை அநீதி, கேவலம் என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் உணரவேண்டும். அவ்வாறே கிறிஸ்துவை உலகிற்கு அவருடைய அன்பை வெளிப்படுத்த வேண்டிய நாம் சபைக்குள் ஜாதி பாகுபாட்டை வைத்துக் கொண்டு நாடார், பிராமினர், முதலியார், கவுண்டர், வன்னியர், பறையர் என்று திருச்சபைகளை வகுத்துக்கொண்டு வாழ்வது தான் கிறிஸ்தவமா என்று கேட்டக்கத்தோன்றுகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காகவும், நமது மிறுதல்களுக்காகவும் ஒரே தரம் சிலுவையில் தமது தூய இரத்தத்தை சிந்தி நம் அனைவரையும் மீட்டுக்கொண்டார். ஆனால் இன்னும் எத்தனை முறை அவ்வாறு நமக்காக ஈனச் சிலுவையை சுமக்கவேண்டும் என்று நாம் எத்தனிப்போம். சமீபத்தில் CSI Christ Church, Kovai யின் அழைப்பிதழ் ஒன்றை சமூக வலைத்தளத்தில் கண்டேன். அதில் 1-5-22 அன்று கட்டிடத் திறப்பு முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் பிரேயர் ஹால் திறப்பு என்று போடப்பட்டிருந்தது, நிகழ்ச்சியில் பேராயர் RT Rev. திமோத்தி ரவீந்தர் மற்றும் பேராயரம்மா. ஆனி ஹேமலதா ஆகியோர் முன்னிலை என்று போடப்பட்டிருந்தது. எல்லாம் சரி தான், ஆனால் ஜாதி பெருமையை சாகடிக்காமல் எத்தனை கட்டடங்கள் கட்டி என்ன? எத்தனை ஜெப அறைகள் திறந்து என்ன பயன். இதை உணராத திருச்சபைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு இழுக்கையும், அவமானத்தையும் அல்லவா தேடித்தருகின்றன. எத்துணை பெரிய ஊழியத்தை செய்தாலும், எத்துணை பெரிய ஊழியராக இருந்தாலும் ஒரு பயனுமில்லை. என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். மாற்கு : 11 ; 17.

நாமும் நமது ஆண்டவருக்கான ஊழியங்களும், மற்றும் பல சேவைகளும் எல்லாருக்குமானது என்று உணராத வரையில் நம்மால் ஆண்டவருக்கு மகிமையை சேர்க்க முடியாது. நாம் நமக்கு பேர் உண்டாகவா ஊழியம் செய்கிறோம். கிறிஸ்துவம் என்பது எல்லோருக்கும்மானது, இன்னும் குறிப்பாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் எல்லருக்குமானவர், ஆகவே தான் அவரிடத்தில் எந்த பேதமும், பாகுபாடுமில்லை. எல்லோரும் ஆண்டவருக்குள் ஒன்றாகவே இருக்கிறோம். வெறும் வார்த்தையில் அன்புக் கூறுவதல்ல கிறிஸ்துவ ஜீவியம், அவ்வாறே செய்கையிலும் காண்பிப்பது தான் கிறிஸ்துவை நாம் நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். பேருக்கும் புகழுக்கும் வாழ்வது வாழ்க்கையாகாது. நமது செய்கைகள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையையும் மகத்துவத்தையும் கொண்டு வரவேண்டும் என்பது தான் திருச் சபைகளின் நோக்கம். ஆனால் திருச் சபைகளோ ஜாதியை  முன்னிறுத்துமானால் முடிவு அழிவு என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். அந்த அழைப்பிதழில் Admin. Secretary, Finance Administrator, தலைமை ஆயர், உதவி ஆயர்கள், ஆலைய செயலர், பொருளர், பில்டிங் கமிட்டி கன்வீனர் மற்றும் DC, PC மெம்பர்கள் என்று ஏராளமானவர்கள் இருந்தும் இத்துணை பெரிய தவறு நடக்கிறது என்றால் ஒருவருக்கும் உணர்வு இல்லை என்றே பொருள். சமூதாய மீட்பிற்காக தேவன் திருச்சபைகளை நமக்கு தந்திருக்கிறார். திருச் சபையின் கடமையையும், பொறுப்பையும் நாம் தவற விடுவோமானால் அதற்கான ஆக்கினை தீர்ப்பு வரும் என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருப்பது நல்லது. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொருபலி இனியிராமல்,நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபிரெயர்: 10 : 26 – 27. இந்தியா தேசமோ, இந்தியாவின் எந்த ஒரு மாநிலமோ, அம்மாநிலத்திலுள்ள மாவட்டமோ, தாலுக்காவோ, நகரமோ, கிராமமோ இந்த பாகுபாட்டில் மாறாமல் இருக்குமானால் அதற்கு கிறிஸ்துவை உடையவர்களாகிய நாமே பொறுப்பு. தேசம் அழிவின் பாதையில் பயணிக்கிறது என்றால் அதற்கும் நாமே பொறுப்பாளிகள் என்பதை உணர்வோம்.   

சகோதர சகோதரிகளே நாம் நம் அழைப்பில் உறுதியாய் இருப்போம்! சாட்சியாய் நிற்ப்போம்!! தேவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

 

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

  

  

 

 

No comments:

Post a Comment