ஆண் மக்களுக்கு கர்த்தரின் எச்சரிக்கை!
புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன். ஏசாயா : 13 :12 கர்த்தர் எச்சரிக்கிறார், ஆண் மக்களை அபூர்வமாக்குவேன் என்று சொல்லுகிறார். எப்படி? அபூர்வமாக்குவேன் என்றும் நமக்கு விளக்கமும் தருகிறார். கவனியுங்கள், அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். ஏசாயா : 4 : 1 இதன் அர்த்தம் என்னவென்றால், ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் எனும் விதிகாச்சார அடிப்படையில் ஆண் மக்களின் ஆதிக்கத்தை குறைப்பேன் என்று சொல்லுகிறார். அதாவது 7 : 1 என்கிற சூழலுக்கு ஜனத்தொகையில் மாற்றங்கள் நிகழும் என்று கர்த்தர் சொல்லுகிறார். பொதுவாக 1 : 1 என்பதே ஜனப்பெருக்கத்தின் அடிப்படை கோட்பாடாகும். இதை தான் ஆண்டவர் ஆதியில் ஆதாம் + ஏவாள் என்று உருவாக்கினார். ஆனால் அதுவே நாளடைவில் 1000 ஆண்களுக்கு 994 பெண்கள் அல்லது 1000 பெண்களுக்கு 994 ஆண்கள் என்கிற ரீதியில் மாற்றங்கள் வரத்துவங்கியது. இதில் இன்னும் பல இடங்களில் 4 - 5 % ஏற்ற இறக்கங்களோடு இருப்பதை கவனிக்க முடியும். ஒரு அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வரை பெண்களை வீட்டின் படி தாண்ட விடாமல் பாதுகாக்கப்பட்டார்கள். ஆனால் தற்போதைய நிலைமை தலை கீழ் மாற்றம். ஒரு காலம் வரைக்கும் இது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியது என்று சிலப்பல வேலைகள் இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை, பெண்கள் செய்ய முடியாதது என்று எதுமே இல்லை என்கிற நிலைமை வந்து விட்டது. இன்று வானுர்தி துவங்கி கப்பல், இரயில், கனரக வாகனங்கள் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் பெண்கள். ஆனால் ஆண்களின் நிலையோ பரிதாபகரமாக மாறிவிட்டது. இன்று பெண்கள் ஆண்களுக்கு போட்டியாளர்களாகவும் அதற்கும் மேலாகவும் வளர்ந்து விட்டார்கள். தமிழ் நாட்டின் புள்ளிவிவரக்கணக்கின்படி 2023 ல் ஆண்களில் மதுக் குடிப்பவர்கள் எண்ணிக்கை 18 %, ஆனால் அதுவே சமீபத்திய கணக்கின் படி 32.8 % என்று உயர்ந்துக் கொண்டே போகத்துவங்கி விட்டது. இது போதாதென்று பல ஆண்கள் பல்வேறு வியாதிகளால், பல்வேறு தவறான பழக்க வழக்கங்களாலும் பீடிக்கப்பட்டு ஒதுங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இன்று பெரும்பாலான குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களே அதிகம். கணவனை இழந்த தாய் தான் குடும்பங்களை பராமரிக்கும் அவல நிலை இங்கு அதிகம். திருமணமான பெண்களில் பலர் தங்களுக்கு வாரிசு வேண்டி கருத்தரிக்கும் மையங்களையே நம்பியிருக்கும் சூழலும் வெகுவாக பெருகிவருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஏன் இந்த நிலை என்று ஒருவரும் சிந்திக்க வில்லை. கர்த்தர் ஆண்களுக்கென்று விசேஷமான அந்தஸ்தை கொடுத்திருந்தார். முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29 இதன் முக்கியத்துவத்தை குடும்பங்களும் கண்டுக்கொள்ளவில்லை, ஆண் பிள்ளைகளும் உணர்ந்துக்கொள்ள வில்லை. இது போதாதென்று பெரும்பாலான ஆண் மக்கள் கர்த்தரை உதாசீனப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இதை நாம் ஓய்வு நாள் ஆராதனையில் நம்முடைய சபைகளில் மிகத் தெளிவாக காணமுடியும். மிகச் சிறிய அளவிலான எண்ணிக்கையில் ஆண் மக்கள் நம்முடைய திருச்சபைகளில் கலந்துக்கொள்ளுவது வேதனையிலும் வேதனை. இது மாத்திரமில்லாமல் ஆண்கள் குடும்பங்களில் எண்ணப்படாமல் போகும் சூழலும் பெருகுவதை காணமுடிகிறது. இவை அனைத்தையும் ஆண்கள் கவனத்தில் கொண்டால் நல்லது, ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu.
No comments:
Post a Comment