Saturday, June 8, 2024

அந்நிய பாஷை ஒரு வரம் - சுவி.பாபு T தாமஸ்!

 


அந்நிய பாஷை ஒரு வரம் – சுவி.பாபு T தாமஸ்

 

அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அப்போஸ்தலர் : 19 : 6

 

அந்நிய பாஷை ஒரு வரம் :

 

அந்நிய பாஷை என்பது ஒரு அபிஷேக வரம், மாற்று கருத்து இல்லை தான். இது பரிசுத்தாவியின் அபிஷேகத்தால் அருளப்படுவது என்பதும் உண்மையே. இது மகோண்னத அபிஷேகங்களில் ஒன்று என்பதில் சந்தேகமும் இல்லை. இந்த அபிஷேகத்தை குறித்த விளக்கத்தை நாம் பரிசுத்த வேதாகமத்தில் காண முடியும். இன்னும் குறிப்பாக பரிசுத்த பவுல் அவர்கள் ஒரு விளாவரியான விளக்கத்தை கொடுத்திருப்பதும் உண்மையே. எனினும் இன்றைய 21ஆம் நூற்றாண்டு கால ஊழியர்களும், சபை விசுவாசிகளும் இவ் வரத்தின் புரிதலும், பயன் பாட்டில் காணப்படும் குறைபாடுகளும் நமக்கு ஒரு வித ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே சற்று ஆழமாக ஆவியானவர் ஒத்தாசையோடு கூர்ந்து தியானித்து விவரிக்க விழைகிறேன். ஆவியின் வரங்களைக் குறித்து பரிசுத்த பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் எழுதும் போது, ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். I கொரிந்தியர் : 12 : 7 – 11.
ஆக இங்கே ஒன்று நன்கு விளங்குகிறது அந்நிய பாஷை என்பது ஒரு மொழி என்பது நமக்கு நன்கு புலப்படுகிறது. அதிலும் குறிப்பாக பற் பல பாஷைகளை பேசுதல் மற்றும் வியாக்கியானம் பண்ணுதல் என்று நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆவியானவரும் தேவைகளுக்கு ஏற்ப வரங்களை பகிர்ந்து கொடுக்கிறார் என்றும் நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

 

அந்நிய பாஷை என்பது மொழியே:

 

இந்தியாவில் ஆயிரகணக்கில் மொழிகள் உண்டு என்று நாம் அறிவோம். அதிலும் அட்சரமில்லா வழக்கு மொழிகளும் அடங்கும் என்றும் நாம் அறிவோம். பவுல் அவர்கள் தனது பயணங்களில் மற்றும் தனது ரோமாபுரி பயணத்திலும் ஏராளமான வேற்று மொழியாளர்களை சந்திக்க நேர்ந்திருக்கும் என்று அறிவோம். அதேப் போல பரிசுத்த தோமா அவர்கள் தனது இந்திய பயணத்தில் பல்வேறு மொழி பயன்பாட்டாளர்களை சந்தித்திருப்பார். அவ்வாறே 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட மிஷினேரிகள் எப்படி இந்திய மண்ணில் மொழிகள் அறியாமல் காலடி வைத்திருக்க முடியும். இங்கேயே வாழ்ந்து மரித்தவர்களும் பல ஆயிரம் என்றிருக்க, இவை அனைத்தும் ஆவியானவரின் பற் பல பாஷைகளின் வரம் என்பது இப்பொழுது நமக்கு விளங்குகிறதல்லவா! ஒரு சுவாரசியமான சம்பவமும் பரிசுத்த வேதாகமத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பரிசுத்த பவுல் சவுலாக இருந்த போது பிரதான ஆசாரியரிடம் கடிதம் பெற்று தமஸ்குவை நோக்கி பயணித்தப் போது இடையில் சம்பவித்த செயலை அகிரிப்பா ராஜாவிடம் விவரிக்கும் போது, நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்போஸ்தலர் : 26 : 14 என்று சொல்லுகிறார். அப்படியானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் இருந்து சவுலோடு பேசிய மொழி எபிரெயம் என்பதே அன்றி வேறு எந்த தேவ பாஷையிலும் அல்ல என்பதும் நமக்கு நன்கு விளங்குகிறது. ஆனால் இங்குள்ள சில ஊழியர்கள் தங்கள் சபைகளில் தேவ பாஷையில் பேசுகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு தங்கள் வாயிக்கு வந்ததை உலறுகிறார்களே ஏன் என்பது தான் வேதனையாகவும், வருத்தமாகமும் இருக்கிறது.

 

பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய அக்கினி நாவுகள் :

 

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அப்போஸ்தலர் : 2 : 1 – 4. இங்கே தான் நாம் ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் என்று நம்புகிறேன். அதாவது அப்போஸ்தலர்கள் நூற்றிருபது பேர் மேல்விட்டறையில் கூடி ஜெபத்தில் தரித்திருந்த போது அக்கினி மயமான நாவுகள் பலமாய் இறங்கிற்று. அச் சமயத்தில் உலகமெங்கும் பரவி வாசம் செய்த யூதர்கள் எருசலேமில் இருந்தார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. ஆகவே அவர்கள் அப்போஸ்தலர்கள் பேசக் கேட்ட வார்த்தைகளை கேட்டு கலங்கினார்கள் என்று சொல்லப்படுகிறது. ஏன் என்றால் இவர்கள் அவர்கள் ஜென்ம பாஷையில் பேசக் கேட்டு கலங்கினார்கள் என்பது தான் அது. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். அப்போஸ்தலர் : 2 : 5 – 11.
ஆக அப்போஸ்தலர்கள் பேசியது அந்நிய பாஷையான பல்வேறு தேசங்களில் வழக்கத்தில் இருந்த மொழிகளில் தேவனுடைய மகத்துவங்களை பேசினார்கள் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவாகச் சொல்லுகிறது. அவர்கள் அனைவரும் பேசியது தேவ பாஷையல்ல மாறாக உலகத்தில் வழக்கத்தில் இருந்த மொழி தான் அது என்பது விளங்குகிறதல்லவா. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபலமான ஊழியர் ஒருவர், அவர் BSNLல் பணியாற்றிக்கொண்டு ஊழியம் செய்து வந்தார். அவருக்கு சிறு நீராக பிரச்சனையும் உண்டு என்றாலும், மிகச் சிறப்பாக ஊழியம் செய்து வந்தார். அவர் ஒரு முறை China சென்றிருந்த போது ஒரு சபையில் ஒரு பெண்மணிக்கு ஜெபித்தப் போது அந்த பெண்மணி ஊழியரிடம் நீங்கள் எங்கள் மொழியில் பேசுகிறீர்களே எப்படி என்று வினவினாளாம். இது தான் அந்நிய பாஷையின் மகத்துவம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

 

நம் சபைகளில் அந்நிய பாஷை வழக்கம்:

 

இன்றைய நம்முடைய சபைகளில் அந்நிய பாஷை வரம் என்பது பக்தியின் வெளிப்பாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது. ஆகவே சில ஊழியர்கள் தங்கள் விசுவாசிகளை வாயை திறவுங்கள், பேசுங்கள் என்று சொல்லி வலியுறுத்துவதால் ஊழியர் பேசும் வார்த்தையையே உள் வாங்கி அல்லது அவ்வார்த்தைக்கு இணையான வார்த்தைகளை அல்லது மனதில் தோன்றும் வார்த்தைகளை சொல்லி பேசும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல.
ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். I
கொரிந்தியர் : 14 : 7 – 11. அர்த்தமில்லாத வார்த்தைக்கு என்ன பொருள் என்று சிந்திக்க வேண்டாமா? அல்லது நாம் பேசும் வார்த்தையின் அர்த்தத்தை நாம் தேவனுக்கு தெரிய செய்ய வேண்டாமா? என்று அறிவது அவசியமாக இருக்கிறது. எதோ பேச வேண்டும், எதையாவது சொல்ல வேண்டும் என்று வார்த்தைகளை உபயோகிப்பது தகுதியா? என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்.
என்னத்தினாலெனில், நான் அந்நிய பாஷையிலே விண்ணப்பம் பண்ணினால் என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. I
கொரிந்தியர் : 14 : 13 – 16. ஒருவன் அந்நிய பாஷையில் பேசினால் அதே ஆவியின் வரத்தையுடைய வேறொருவன் அதற்கான அர்த்தத்தையும் சொல்லக்கடவன் என்று பரிசுத்த பவுல் அவர்கள் சொல்லுகிறார். யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். I கொரிந்தியர் : 14 : 27. மாற்று மொழியாளர் ஒருவர் சபைக்கு வந்தால், வந்தவர் வெறுமனே வந்து செல்லுவதால் அவரால் சபைக்கும் பிரயோஜனமில்லை வந்த அவருக்கும் ஒரு லாபமுமில்லை. நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; I கொரிந்தியர் : 14 : 12.

 

கடைசியாக சகோதரரே,

 

மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? I கொரிந்தியர் : 14 : 6. நமக்கு நாமே வார்த்தைகளை அடுக்குவதால் ஒருவருக்கும் லாபமில்லை. அது மாத்திரமல்ல, மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? I
கொரிந்தியர் : 14 : 21 – 23. இங்கே சொல்ல நினைப்பது இது தான், நீங்கள் அந்நிய பாஷையில் பேச விரும்பினால் அது அவரவர் தனி ஜெப வேளையிலும், ஆண்டவரோடு தனித்திருக்கும் சமயங்களிலும் இருந்தால் நல்லது. அப்பொழுது தேவனோடு இரகசியம் பேச ஒரு வேளை அந்நிய பாஷையை பயன் படுத்தலாம். ஒரு குழப்பமும் இல்லை, மாறாக சபையில் பேசுவதால் யாருக்கும் லாபமில்லை என்பதையும் யாவரும் உணர்த்திருப்பது நல்லது. அன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இஸ்ரவேல் மக்களோடு வாழ்ந்த காலத்தில் சுகவீனமுள்ளவர்களை, பிணியாளிகளை குணப்படுத்தினார். ஆனால் வேதபாரகரும், பரிசேயரும் ஓய்வு நாளில் குணப்படுத்துவது தவறு என்று சொல்லி எதிர்த்தார்கள். ஆனால் ஆண்டவரோ ஓய்வு நாளில் ஒருவருக்கு சுகமளிப்பது எப்படி தவறாகும் அல்லது ஓய்வு நாள் கட்டளையை மீறிய செயலாகும் என்று கேட்டார். அப்படியே அந்நிய பாஷையின் அர்த்தம் புரியாமல் வரம் ஒன்று இருப்பதாக நினைத்து பயன் படுத்த நினைத்தால் தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் நாம் உணர்வது நல்லது என்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். அந்நிய பாஷையின் வாரத்தை உடையவர்கள் தேவைப்படும் சமயத்தில் பயன் படுத்தி தேவனுடைய ராஜ்யத்திற்கான ஆத்துமா அறுவடையை முன்னிட்டு பயன் படுத்த வேண்டும், தேவ ராஜ்யம் கட்டுவோம்,ஆமென்.

 

Evg.Babu T Thomas – Our Shepherd’s Voice Foundation – No 6, II Phase Velammal Nagar – Thirumugur Main Road – Rajakembiram Village – Yanai Malai Oththakkadai – Madurai – 625 107 – Tamil Nadu – Email Id : ourshepherdsvoice@gmail.comhttps://ourshepherdsvoicefoundation.blogspot.com – Mobile : 98423 23428 – 80567 00213.   

 

 

 

 

   

 

 

 

No comments:

Post a Comment