யார்? உங்கள் குடும்பத்திற்கு உத்தரவாதி! சுவி. பாபு T தாமஸ்
இந்த கேள்விக்கு நம்முடைய பதில் பலவாறாக இருப்பினும், பொதுவான கருத்து என்பது குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்பது பெருவாரியானவர்களின் அபிப்பிராயமாக உள்ளது. ஆனால் பரிசுத்த வேதாகமம் இதற்கு முறையான வழிகாட்டுதலை முன்வைக்கிறது. ஆனால் நாம் யாரும் இதை கவனித்ததாகத் தெரியவில்லை. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா : 8 : 12. இதற்கு காரணம், அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. மாற்கு : 7 : 6-7,9 இங்கே அவரவருக்கான நீதி என்பதே பிரதானம். ஆனால் பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது, இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக. உபாகமம் : 12 : 8
ஆபிரகாமை அழைத்த தேவன், அவனுக்கு சொன்ன முதல் கட்டளை என்பது என்ன வென்றால், கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் : 12 : 1 அதாவது தேவன் முதலாவது ஆபிரகாமின் சுபாவத்தை மாற்ற விரும்பினார். In born nature என்று சொல்லப்படும் பழக்க வழக்கத்தை முற்றிலுமாக மாற்ற விரும்பினார் என்பதே எதார்த்தம். தேவை மனமாற்றம் மட்டுமே ஒழிய பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்பது ஏற்புடையது அல்ல. ஆகவே பல நுணுக்கமான காரியங்களை உள்ளடக்கி இருக்கிறது பரிசுத்த வேதாகமம். ஆகவே தான் பரிசுத்த வேதாகமத்தை நாம் அனுதின தியானமாக மாற்றவேண்டும் என்றும் பரிசுத்த வேதாகமம் வலியுறுத்துகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 119 : 105 சரி விஷயத்திற்கு வருவோம், முதலாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குடும்பம் இதை எப்படி கையாண்டது என்று பார்ப்போம். முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், லூக்கா : 2 : 23
அப்படியானால் நியாயப்பிரமானத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்தால் தான் நமக்கு முழு விவரம் புரியும். முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29 அப்படியானால் நம்முடைய குடும்பங்களில் முதற்பேறான குமாரனே குடும்பத்தின் உத்திரவாதியாகக் கருதப்படுவான். நாம் இக்காரியத்தை நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொள்ளாததன் காரணமாகத்தான் கர்த்தர், நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசேக்கியேல் : 22 : 30 என்று ஆதங்கப்படுகிறார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இது மாத்திரமல்ல முதற்பேறானவர்களுக்கென்று ஒரு விசேஷத்தையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது, பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், எபிரேயர் : 12 : 23 முதற்பேறானவர்களுக்கென்று ஒரு சர்வ சங்கமொன்று இயங்குகிறது என்பதையும் நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதை நாம் முதலாவது உணரவேண்டும்.
இறுதியாக ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன், நமது இந்திய தேசத்தின் அரசியமைப்பு சட்டதிட்டமும் ஆண்டவரின் திட்டங்களுக்கு ஒத்திருப்பது நமக்கெல்லாம் ஆச்சரியமே. நம்முடைய மாநிலங்களில் இருவர் முதன்மையானவர்கள் ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றொருவர் ஒன்றிய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர். அது போலவே நம்முடைய குடும்பங்களின் பாதுகாப்பிற்கென்று நாம் நம் குடும்பங்களின் சார்பாக முதற்பேறான குமாரனை நாம் திறப்பிலே நிற்க வைப்பது மாத்திரமல்ல, பரலோகத்தின் சார்பாக நம் ஒவ்வொருவருக்காக தேவ தூதன் ஒருவன் நியமிக்கப்பட்டிருப்பது எத்துணை பொருத்தம் என்று எண்ணிப்பாருங்கள். இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு : 18 : 10 ஆகவே நாம் செய்யத் தவறியதை இன்றே சரி செய்து நம்முடைய தவறை நேர்செய்வோம். அப்போழுது தேவன் நம்மை அபரிதமாய் ஆசீர்வதிப்பார், ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation, Ranipet - 632 401, Tamil Nadu
https://ourshepherdsvoicefoundation.blogspot.com

No comments:
Post a Comment