Wednesday, October 22, 2025

ஞாயிற்றுக் கிழமை! சுவி.பாபு T தாமஸ்

 ஞாயிற்றுக் கிழமை!

ஞாயிறு என்பது துயில், உதயம் என்றெல்லாம் பொருள் கொடுப்பது போல், வாரத்திற்கு முதல் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை என்று அமையப்பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு நாளும் உதயமாகிற பொழுது எப்படி உலகத்திற்கும் உலக மக்களுக்கும் அந்த நாள் விசேஷமோ, அவ்வாறு ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளாகிய ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நம் எல்லோருக்கும் மகிழ்ச்சித் ததும்பும் நாள் என்றால் மிகையல்ல என்பது உண்மையே. ஞாயிற்றுக் கிழமை என்ற உடன் பெரும்பாலான கிறிஸ்தவ குடும்ப அங்கத்தினர்கள் நினைவில் தாண்டவமாடும் நினைவு என்பது தேவாலயம் செல்லவேண்டும் என்கிற அந்த உணர்வு தான் மாத்திரமல்ல நம் எல்லோருக்கும் மன உற்சாகத்தின் நாளும் பரப்பரப்பின் நாளும் அதுவே. நான் சிறுவயதில் பெங்களூர் பட்டினத்தில் கல்விப்பயின்ற சமயத்தில் காக்ஸ் டவுன் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பரிசுத்த பேதுரு தேவாலயத்தில் சில வருடங்கள் ஆல்டர் பாயாக பணியாற்றிய அனுபவமுண்டு. இவ்வாலயத்தில் கிராஸ் பேரராக இருந்து சிலுவையை சுமக்கும் அனுபவமும் பெற்றிருக்கிறேன். அச்சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகுந்தப் பரபரப்பு எனக்குள் தொற்றிக் கொள்ளும். நான் வசித்து வந்த முனீரெட்டிப்பாளையத்திற்கும் காக்ஸ் டவுன் பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் என்பது சுமார் 7 - 8 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். ஆலய ஆராதனை நேரம் 8 மணி என்றால் நான் ஒரு இருபது நிமிடம் முன்னால் ஆலயம் சென்றுச் சேரவேண்டும். ஆகவே ஓட்டமும் நடையுமாக அந்த தூரத்தை நான் கடந்தாக வேண்டும். சிலர் பரிதாபப் பட்டு மிதிவண்டியில் பயணிப்போர் உதவினால் அதிசயம். கர்த்தர் மரணம் எனும் துயிலிலிருந்து மீண்டு எழுந்து மகதலேனா மரியாளுக்கு, தமது சீடர்கள் சிலருக்கும் காட்சி தந்தனால் இந்த நன்னாள் நமக்கு விசேஷம்.
கர்த்தர் ஜீவனோடு இருப்பவராக கண்டு மகிழும் நாள் ஞாயிறாகிய இந்த நன்னாளே. உலகம் இந்த நாளை Holiday என்று கொண்டாடுகிறது. நாமோ இந்த நாளை Holy day பரிசுத்த நாள் என்று பாவித்து கர்த்தரை கனப்படுத்துகிற, தொழுதுக் கொள்ளுகிற மனமகிழ்ச்சியின் நாளாக எண்ணி கொண்டாடுகிறோம். பரிசுத்த வேதாகமம் ஆறுநாள் மனிதன் தன்பணிகளை கவனிக்கவும், ஏழாம் நாளை ஓய்வு நாளாக கர்த்தர் எவ்வாறு தன் படைப்பின் பணியை ஆறுநாளில் நிறைவுச் செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல நாமும் அவ்வாறே ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து சகலத்தையும் படைத்து ஆண்டு வழிநடத்திவரும் நம்முடைய ஆண்டவரை தொழவேண்டும் என்று நம்மை பணித்தார். நாமும் அந்நாளை நினைவுக் கூறத்தக்கதாக பரிசுத்த நாளாக முதலாம் நாள் எனும் ஞாயிறுக் கிழமையில் தேவனை உலகமனைத்திலும் ஒரு சேர தொழுது வருகிறோம். எனவே ஒவ்வொரு வாரமும் இந்த நாளுக்காக ஏங்குகிறோம், காரணம் இந்த நாள் நமக்கு கர்த்தரை மகிமைப் படுத்தும் நாள். நீண்ட நாள் தேடலுக்கும் காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் போல் ஓர் உணர்வு பெறுகிறோம். கர்த்தரை தேவாலயத்தில் நமது ஆராதனை வேளையில் காணும் உணர்வு பெறும்போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி பிரவாகிக்கும் நாளாக நமக்கு அமைகிறது. திங்கள் துவங்கி சனிக்கிழமை வரை நாம் பெற்ற அனைத்து நல்ல மற்றும் கசப்பான உணர்வுகளை ஆண்டவர் பாதத்தில் இறக்கி வைத்து கர்த்தரின் புதிய கிருபைகளையும், புதிய பெலனையும் பெற்றுக்கொள்ளும் நாளாகவும் இந்நாள் நமக்கு அமைந்திருக்கிறது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் குறிப்பாக மனுக்குலத்தை படைத்தவராகிய அவரின் மகத்துவத்தை எண்ணி துதிக்கும் நன்னாள் இந்நாள். ஒரு கவிஞன் ஞாயிறை கண்ணாக வர்ணிக்கிறான். அவ்வாறே நம் சரீரத்திற்கு கண் என்பது பிரதானமானது போல ஞாயிற்றுக் கிழமையாகிய இந்த நாளை நாம் அனைவரும் கண்ணென பாவித்து எல்லோரும் மன உற்சாகமாய் எழுந்து நம்மை படைத்த நல்ல கர்த்தரை மனமகிழ்ச்சியோடு தொழுது மகிழ தேவாலயம் நோக்கி புறப்படுவோம், ஆமென். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,

Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment