Saturday, November 25, 2023

முதலாம் சங்கீதம் சொல்லும் செய்தி!


 முதலாம் சங்கீதம் - சுவி. பாபு T தாமஸ்

1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4. துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு மூன்று முத்தான கருத்துக்களை தெரிவிக்கிறது. 1. செயத்தக்கவை 2. செய்யத்தகாதவை 3. இவ் இரண்டிற்குமான பாலா பலன்கள். இந்த உண்மையை தான் முதலாம் அதிகாரம் நமக்கு தெளிவு படுத்துகிறது. மனிதர்களாகிய நாம் நம் வாழக்கையில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய முறைமைகளை தெரிவிப்பது சங்கீதம் முதலாம் அதிகாரத்தின் நோக்கம். ஆகவே தான் சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு செயத்தக்கவை எவை மற்றும் செயத்தகாதவை எவை என்று கூறுகிறது. அதோடு நில்லாமல் அவ்வாறு செய்வதால் வரும் பலன்களையும் இந்த அதிகாரம் நமக்கு வெளிப்படுத்துவது மற்றுமொரு சிறப்பு. சரி இப்போது முதல் வசனத்தை கவனிப்போம். முதல் வசனம் செய்யத் தகாதவை எவை என்று நமக்கு தெரிவிக்கிறது. வசனம் தெரிவிப்பது என்ன வென்றால் துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், என்று கூறுவதை நாம் பார்க்கிறோம். இங்கே ஒரு கேள்வி துன்மார்க்கர் யார்? பாவி என்பவர் யார்? பரியாசக்காரர் என்பவர் யார்? என்று நமக்குத் தெரியுமா? என்பது தான் அது. அது மாத்திரமல்ல நாம் ஒருவரையும் குற்றவாளியாக கருதுவதும், அனுமானிப்பதும் தவறு என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு : 7 : 1 - 2.
இது இப்படி இருக்க ஒருவர் துன்மார்க்கர் யார் என்று தெரிந்தால் தான் நாம் அவர் ஆலோசனையை கேட்காமல் நடக்க முடியும். ஒருவர் பாவி என்று தெரிந்தால் தான் நாம் அவர் வழியில் போகாமலும, நில்லாமலும் இருக்க முடியும். அதே போல பாரியாசக்காரர் யார் என்று தெரிந்தால் தான் நாம் அவரோடு உறவாடாமல் இருக்க முடியும். அப்படியானால் இவர்களை நாம் எப்படி அடையாளம் காண்பது என்பது முக்கியம். இதை கர்த்தர் தான் நமக்கு வெளிப்படுத்த வேண்டும். மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். சங்கீதம் : 144 : 11. இதற்கு நமக்கு தேவை கர்த்தர் மீதான நமது நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையாகும். கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். எரேமியா : 17 : 7. கர்த்தர் மீதான நமது நம்பிக்கையின் பெருக்கம் தான் நமக்கு உணர்வுள்ள ஆவியை பெற்றுத் தரும். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். சங்கீதம் : 111 : 10. ஒரு அழகான சம்பவம் பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தர் சாலமோன் ராஜாவுக்கு கனவில் தரிசனமாகி உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறார். சாலமோன் ராஜா கர்த்தரிடத்தில் தனக்கு ஞானமுள்ள இருதயம் வேண்டும் என்று கேட்டான் என்று தெரிவிக்கிறது. கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர்.
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார். I இராஜாக்கள் : 3 : 5 - 14. சாலமோன் கர்த்தரிடத்தில் ஐசுவரியத்தையோ, நீண்ட ஆயுளையோ, சத்துருக்களின் பிராணனையோ கேளாமல் உணர்வுள்ள இருதயம் வேண்டும் என்று கேட்டு பெற்றுக்கொண்டான் என்று பார்க்கிறோம். ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். ஏசாயா : 11 : 2. இதுவே நன்மை இன்னதென்றும் தீமை இன்னதென்றும் அறிந்து உணர்வதற்கான வழிமுறையாகும். இதையே நாமும் கர்த்தரிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது செயத்தக்கவை, இதற்கு பதில் இரண்டாவது வசனத்தில் காணப்படுகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருப்பதே செயத்தக்கவையாகும். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக்கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. சங்கீதம் : 119 : 97 - 98. ஏனென்று சொன்னால், உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் : 119 : 105. அப்பொழுது, அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். எரேமியா : 17 : 8. இது எதை குறிக்கிறது என்று சொன்னால், உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. சங்கீதம் : 119 : 165. என்பதை நமக்கு மெய்பிக்கிற உணர்வை தருகிறதாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்று சொன்னால், அதற்குகான விளக்கத்தையும் பரிசுத்த வேதாகமம் நமக்கு வெளிப்படுத்துவதை நாம் காணலாம். உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் : 119 : 160. ஆக பரிசுத்த வேதாகமம் முழுவதும் சத்தியமாக இருக்கிறது, சத்தியத்தை மட்டுமே அது நமக்கு போதிக்கிறது. சத்தியம் அறிவையும, தெளிவையும் நமக்கு தருகிறது. ஆகவே வழியில் இடறல் என்பது அறவே இல்லை. சத்தியம் தான் நமக்கு மெய் ஞானத்தை தருகிறது. எனவே சத்தியதின் மீது கவனம் வைத்து செயல் படும் போது நாம் கலங்கத் தேவை இல்லை. வசனம் சொல்லுகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2. பாக்கிய வான்கள் என்றால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள் என்று பொருள்.
மூன்றாவது பலன்கள் : அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது. சங்கீதம் : 144 : 12 - 15. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். சங்கீதம் : 1 : 3. எனவே செய்யத் தக்கவைகளை அறிந்து நடப்பவர்கள் நல்ல நீரோட்டதில் நாட்டப்பட்ட விருட்சத்தை போலவும், அதினதின் காலத்தில் தன் கனிகளை கொடுக்கவும், இலையுதீராமல் எப்பொழுதும் செழிப்பாக இருப்பது போலவும, தான் கையிட்டு செய்யும் எல்லா காரியங்களும் வாய்க்கும் என்றும் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. ஆகவே சங்கீதம் முதலாம் அதிகாரம் நமக்கு சொல்லும் உண்மையை புரிந்துக்கொண்டு, செயத்தக்கவை இன்னது என்று அறிந்து நாம் நடப்போமானால் பாக்கியவான்களாய் இருப்போம். ஆமென்.
பின் குறிப்பு : பொதுவாக பெருபாலான குடும்பங்களில் குடும்ப ஜெபம் என்பது அறவே இல்லாத சூழல் நிலவுவதையும், பல காரணங்களுக்காக தடை பட்டிருப்பதையும் அறிந்திருப்போம். ஆலயத்திற்கு செல்லுவது, அனுதினமும் குடும்ப ஜெபம் செய்வது, பரிசுத்த வேதாகமத்தை தியானிப்பதை வழக்கமாக கொண்டிருப்பது போன்ற காரியங்கள் குடும்பங்களில் நடைபெறாமல் இருக்க சத்துருவானவன் கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு வகைகளில் நமக்கு இடையூறு பண்ணிக்கொண்டிருக்கிறான். இதை உணராமல் நாமும் அதின் போக்கில் செயல் பட்டு நமது ஆசீர்வாதங்களை இழந்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்து செயல் பட வேண்டும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை. ஆகவே விடாப்பிடியாய் முயற்சிக்கும் போது வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள் - கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், மதுரை - 625 107.
May be a doodle of text that says 'DO's DON'TS'
All reactions:
Vijayakumari Geetha

No comments:

Post a Comment