Wednesday, October 22, 2025

உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance! சுவி.பாபு T தாமஸ்

 


உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance!

ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் எனப்படும் உயிர் காக்கும் அவசர ஊர்தி சமீபக்காலமாக அரசியல்வாதிகளால் விமர்சனத்திற்குள்ளாவதும், அதன் ஓட்டுனர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது. பொதுவாக நாம் படிக்கின்ற காலத்தில் சாலையை கடக்கும்பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் அதற்கு முதலில் வழிவிடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அவ்வண்ணமே சாலையில் நாம் பயணிக்கும் பொழுது போக்குவரத்து காவலர்களோ அல்லது பொது ஜனமோ ஆம்புலன்ஸ் சிவப்பு சுழல் விளக்கோடு கூடிய ஒலிச்சத்தம் கேட்டவுடன் நாம் எச்சூழலில் இருந்தாலும் உடனடியாக அவ்வாகனத்திற்கு
வழி விடுவது வாடிக்கை, காரணம் மனித உயிரின் மதிப்பறிந்தவர்களாக நாம் வளர்த்தெடுக்கப்பட்டோம். ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் வாகனத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது பிரச்சார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டப் பொழுது ஓரிடத்தில் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் சாலையை கடக்க முற்பட்டப் பொழுது ஆம்புலன்ஸ் வாகனத்தை குறித்து விமர்சித்து, அவ்வாகன ஓட்டியை மிகக் கடுமையாக எச்சரித்தார். இதை தொடர்ந்து அவருடைய தொடர் சுற்றுப்பயணத்திற்கிடையே அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் அதிமுகவின் தொண்டர்களால் தாக்கப்பட்டார்கள் என்றச்செய்தியினை தினசரி பத்திரிக்கை வாயிலாகவும் தொலைகாட்சியின் செய்தி வாயிலாகவும் பார்த்தோம். கடந்து சில தினங்களுக்கு முன்னர் திருவாளர் விஜய் அவர்களின் சுற்றுப்பயண கூட்டம் கரூரில் நடைப்பெற்றது. அந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி 41 பேர் அகால மரணம் அடைந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அச்சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் அந்த கூட்டநெரிச்சலில் ஒரு பெண் தனது ஆடைகள் களைந்து விட தனது மேல்ச்சட்டையை கழற்றிக்கொடுத்து அப்பெண்ணின் மானத்தை காப்பாற்றியதும் அன்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்த அந்த நபரும் தாக்கப்படுகிறார் என்றால் நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா? அங்கே எடப்பாடி அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விமர்சிக்கிறார் இங்கே கரூரில் விஜய் அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விம்சிக்கிறார். உண்மை இருப்பின் எவரும் விமரிசிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் பொறுப்பானவர்கள் செய்த பொறுப்பற்ற செயலால் இன்று உயிர் காக்கும் அவசர ஊர்திக்கு வந்திருக்கும் ஆபத்தை பொது ஜனம் கவனிக்கத் தவறியிருக்கிறது. இதில் அபூர்வமாக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒரு பேட்டியில் " இது என்ன மாதிரியான மனநிலை, எங்கள் கூட்டங்களில் கூட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு அனுப்பியிருக்கிறோம்" என்றார். நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? பொது பயன்பாட்டிற்கான சாலைகளை அரசியல் அக்கட்சியினர் தங்கள் பிரச்சாரத்திற்காக அக்கிரமித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அதன் ஓட்டுனர்களை விமர்சிக்கலாமா? சாலைகளில் நடத்தப்படும் கூட்டங்களால் பொது ஜனம் எவ்வளவு சிரமங்களுக்குளாகிறார்கள் என்று ஏன் எவருமே யோசிப்பதே இல்லை. இது தான் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா? கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 8 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் என்றுச் சொல்லி சுமார் 2 மணி நேரம் மொத்த போக்குவரத்தும் சோளிங்கர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை பக்தர்களால் அக்கிரமிக்கப்பட்டு போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. அந்த சாலை தான் சித்தூர்- பள்ளிப்பட்டு - திருத்தணி மார்க்கத்திற்காக வாயில், எவ்வளவு மக்கள் தங்கள் சுய வாகனங்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்துக்கொண்டு சிரமப்பட்டார்கள் என்று நான் அறிவேன். ஏன் இதுபோன்ற கூட்டங்கள் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கிறது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கூட்டங்களுக்கென்ற பிரத்தியேக இடங்களை தேர்வுச் செய்து மேடைகள் அமைத்துக் கொடுத்து பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கருத்து பரிமாற்றம் நடைபெற்றதாக ஏடுகள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்த நவீன காலத்தில் பொது ஜனம் இன்னல்களுக்கு உள்ளாவது அனுமதிக்கமுடியாது. இராணிப்பேட்டையில் சந்தைப்பகுதியில் இது போன்றதொரு பிரத்தியேக கூட்டங்களுக்கென்ற மேடை ஒன்று அமைக்கப்பட்டு பாழாய்ப்போனது தான் மிச்சம். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment