Saturday, November 15, 2025

அதிகாலையில் தேவனை தேடு! சுவி. பாபு T தாமஸ்

 அதிகாலையில் தேவனை தேடு! சுவி. பாபு T தாமஸ்

நாம் தேவனை தரிசிப்பதற்கு உகந்த நேரம் அதிகாலை வேளையாகும். கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏசாயா : 55 : 6 ஆண்டவர் எங்கும் நிறைந்தவர் அல்லவா? என்று சொல்லுபவர்களுக்கு, அது உண்மை தான். ஆண்டவர் எங்கும் வியாபித்திருப்பவர், இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம் : 121 : 4 ஆகவே நாம் அவரை எப்பொழுதும் எவ்வேளையும் எங்கும் தரிசிக்கமுடியும், உண்மை தான் சந்தேகமே வேண்டாம். ஆனாலும் ஏற்ற வேளை என்பது அதிகாலை நேரம் மட்டுமே. என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழிகள் : 8 : 17 தேவனாகிய கர்த்தர் ஆதாமை குளிர்ச்சியான அதிகாலை வேளையில் தான் சந்தித்தார் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். ஆதியாகமம் : 3 : 8 பகலில் குளிர்ச்சியான நேரம் என்பது அதிகாலை வேளை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருக்கவே முடியாது.

சரி கர்த்தரை தரிசிக்க ஏற்ற நேரம் அதிகாலை வேளை என்பதோடு நாம் நின்று விடாமல், பரிசுத்த வேதாகமம் சொல்லும் மற்றுமொரு உண்மையையும் நாம் சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபிரேயர் : 12 : 14 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. I பேதுரு : 1 : 15 - 16 பொதுவாக சுத்தம் என்றவுடன் மேலோட்டமான சுத்தம் என்றே அநேகர் நினைக்கிறார்கள், ஆனால் அது அப்படியல்ல என்பதே நிதர்சனமான உண்மையாகும். உள்ளத் தூய்மை, புறத் தூய்மை மற்றும் சுற்றுப்புறத் தூய்மைகள் ஆகா இம் மூன்று தூய்மையும் அவசியம் ஆகும். பொதுவாக கிறிஸ்தவக் குடும்பங்கள் தங்கள் வீட்டு வாசலை அதிகாலையில் தண்ணீர் தெளித்து துப்புரவு செய்வதேயில்லை. இந்தப்பழக்கம் ஆங்கிலேயர்களை பார்த்து வந்தது என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவம் அவர்களால் இந்தியாவில் பரப்பப்பட்டது என்று நம்புவதில் உண்மையில்லை. உண்மையில் கிறிஸ்தவம் எனும் நற்செய்தி இந்தியாவிற்குள் முதலாம் நூற்றாண்டுகளில் புனித தோமாவினால் கொண்டுவரப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பல அனுபவித்து, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து சில காலம் இந்த பூமியில் வாழ்ந்து பரமேறிச் சென்றார். அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் : 1 : 10 - 11 பிற்பாடு இயேசுவானவர் சொன்னபடியே, பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் : 1 : 8


அப்படியே அவருடைய பன்னிரண்டு சீஷர்களும் உலகமெங்கும் புறப்பட்டு போனார்கள். அப்படிப்போனவர்களில் புனித தோமா அவர்கள் இந்தியாவிற்குள் வந்து இரத்த சாட்சியாக சென்னையிலுள்ள பரங்கி மலையில் மரித்தார். உலகம் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு சுவிசேஷப்பணியை துவங்கி ஆங்கிலேயர்கள் மற்றும் பற்பல நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிசேஷத்தை பரப்ப இரண்டாவது முறையாக இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தார்கள். இது தான் வரலாறு, வந்தவர்கள் கடும் குளிரான பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். அவர்களது பழக்க வழக்கங்கள் வேறு. அவர்கள் அதிகாலையில் வாசலை துப்புரவு செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் வீடும், சுற்றுப்புறமும் எப்பொழுதும் தூய்மையாகவே இருக்கும். போதாக்குறைக்கு வீட்டைச் சுற்றி அழகிய மலர் தோட்டம் வைத்து ரம்மியமாக பராமரிப்பார்கள். இந்த உண்மை புரியாத நம்மவர்கள் வாசலை பெருக்காதே, கோலம் போடாதே என்றெல்லாம் கூறி மக்களை சோம்பேறிகளாக மாற்றிவிட்டார்கள். உடைந்த பொருட்கள், கழிவுப் பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைக்கவே கூடாது. குப்பைகளும் அழுக்குகளும் நிறைந்திருக்கும் வீடுகளுக்குள் ஆண்டவர் வரவே மாட்டார். எனவே எப்பொழுது வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பிரியமானவர்களே சுற்றுப்புற தூய்மையோடும், உள்ளத் தூய்மையோடும் நாம் அதிகாலையில் கர்த்தரை தேடினால், நாம் அவரை காண முடியும். அவர் நம் இல்லங்களில் தலைவராக வீற்றிருப்பார். ஆசீர்வாதங்களை அதனால் வரும் செல்வங்களும் பெருகும், ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

No comments:

Post a Comment