Wednesday, October 22, 2025

ஞாயிற்றுக் கிழமை! சுவி.பாபு T தாமஸ்

 ஞாயிற்றுக் கிழமை!

ஞாயிறு என்பது துயில், உதயம் என்றெல்லாம் பொருள் கொடுப்பது போல், வாரத்திற்கு முதல் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை என்று அமையப்பெற்றிருப்பதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு நாளும் உதயமாகிற பொழுது எப்படி உலகத்திற்கும் உலக மக்களுக்கும் அந்த நாள் விசேஷமோ, அவ்வாறு ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளாகிய ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நம் எல்லோருக்கும் மகிழ்ச்சித் ததும்பும் நாள் என்றால் மிகையல்ல என்பது உண்மையே. ஞாயிற்றுக் கிழமை என்ற உடன் பெரும்பாலான கிறிஸ்தவ குடும்ப அங்கத்தினர்கள் நினைவில் தாண்டவமாடும் நினைவு என்பது தேவாலயம் செல்லவேண்டும் என்கிற அந்த உணர்வு தான் மாத்திரமல்ல நம் எல்லோருக்கும் மன உற்சாகத்தின் நாளும் பரப்பரப்பின் நாளும் அதுவே. நான் சிறுவயதில் பெங்களூர் பட்டினத்தில் கல்விப்பயின்ற சமயத்தில் காக்ஸ் டவுன் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பரிசுத்த பேதுரு தேவாலயத்தில் சில வருடங்கள் ஆல்டர் பாயாக பணியாற்றிய அனுபவமுண்டு. இவ்வாலயத்தில் கிராஸ் பேரராக இருந்து சிலுவையை சுமக்கும் அனுபவமும் பெற்றிருக்கிறேன். அச்சமயங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றால் மிகுந்தப் பரபரப்பு எனக்குள் தொற்றிக் கொள்ளும். நான் வசித்து வந்த முனீரெட்டிப்பாளையத்திற்கும் காக்ஸ் டவுன் பகுதிக்கும் இடைப்பட்ட தூரம் என்பது சுமார் 7 - 8 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். ஆலய ஆராதனை நேரம் 8 மணி என்றால் நான் ஒரு இருபது நிமிடம் முன்னால் ஆலயம் சென்றுச் சேரவேண்டும். ஆகவே ஓட்டமும் நடையுமாக அந்த தூரத்தை நான் கடந்தாக வேண்டும். சிலர் பரிதாபப் பட்டு மிதிவண்டியில் பயணிப்போர் உதவினால் அதிசயம். கர்த்தர் மரணம் எனும் துயிலிலிருந்து மீண்டு எழுந்து மகதலேனா மரியாளுக்கு, தமது சீடர்கள் சிலருக்கும் காட்சி தந்தனால் இந்த நன்னாள் நமக்கு விசேஷம்.
கர்த்தர் ஜீவனோடு இருப்பவராக கண்டு மகிழும் நாள் ஞாயிறாகிய இந்த நன்னாளே. உலகம் இந்த நாளை Holiday என்று கொண்டாடுகிறது. நாமோ இந்த நாளை Holy day பரிசுத்த நாள் என்று பாவித்து கர்த்தரை கனப்படுத்துகிற, தொழுதுக் கொள்ளுகிற மனமகிழ்ச்சியின் நாளாக எண்ணி கொண்டாடுகிறோம். பரிசுத்த வேதாகமம் ஆறுநாள் மனிதன் தன்பணிகளை கவனிக்கவும், ஏழாம் நாளை ஓய்வு நாளாக கர்த்தர் எவ்வாறு தன் படைப்பின் பணியை ஆறுநாளில் நிறைவுச் செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தது போல நாமும் அவ்வாறே ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து சகலத்தையும் படைத்து ஆண்டு வழிநடத்திவரும் நம்முடைய ஆண்டவரை தொழவேண்டும் என்று நம்மை பணித்தார். நாமும் அந்நாளை நினைவுக் கூறத்தக்கதாக பரிசுத்த நாளாக முதலாம் நாள் எனும் ஞாயிறுக் கிழமையில் தேவனை உலகமனைத்திலும் ஒரு சேர தொழுது வருகிறோம். எனவே ஒவ்வொரு வாரமும் இந்த நாளுக்காக ஏங்குகிறோம், காரணம் இந்த நாள் நமக்கு கர்த்தரை மகிமைப் படுத்தும் நாள். நீண்ட நாள் தேடலுக்கும் காத்திருப்பிற்குப் பிறகு கிடைத்த பொக்கிஷம் போல் ஓர் உணர்வு பெறுகிறோம். கர்த்தரை தேவாலயத்தில் நமது ஆராதனை வேளையில் காணும் உணர்வு பெறும்போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி பிரவாகிக்கும் நாளாக நமக்கு அமைகிறது. திங்கள் துவங்கி சனிக்கிழமை வரை நாம் பெற்ற அனைத்து நல்ல மற்றும் கசப்பான உணர்வுகளை ஆண்டவர் பாதத்தில் இறக்கி வைத்து கர்த்தரின் புதிய கிருபைகளையும், புதிய பெலனையும் பெற்றுக்கொள்ளும் நாளாகவும் இந்நாள் நமக்கு அமைந்திருக்கிறது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஜீவ ராசிகளும் குறிப்பாக மனுக்குலத்தை படைத்தவராகிய அவரின் மகத்துவத்தை எண்ணி துதிக்கும் நன்னாள் இந்நாள். ஒரு கவிஞன் ஞாயிறை கண்ணாக வர்ணிக்கிறான். அவ்வாறே நம் சரீரத்திற்கு கண் என்பது பிரதானமானது போல ஞாயிற்றுக் கிழமையாகிய இந்த நாளை நாம் அனைவரும் கண்ணென பாவித்து எல்லோரும் மன உற்சாகமாய் எழுந்து நம்மை படைத்த நல்ல கர்த்தரை மனமகிழ்ச்சியோடு தொழுது மகிழ தேவாலயம் நோக்கி புறப்படுவோம், ஆமென். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,

Ranipet - 632 401, Tamil Nadu, South India.

உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance! சுவி.பாபு T தாமஸ்

 


உயிர் காக்கும் அவசர ஊர்தி! Ambulance!

ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் எனப்படும் உயிர் காக்கும் அவசர ஊர்தி சமீபக்காலமாக அரசியல்வாதிகளால் விமர்சனத்திற்குள்ளாவதும், அதன் ஓட்டுனர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாகியுள்ளது. பொதுவாக நாம் படிக்கின்ற காலத்தில் சாலையை கடக்கும்பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் அதற்கு முதலில் வழிவிடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அவ்வண்ணமே சாலையில் நாம் பயணிக்கும் பொழுது போக்குவரத்து காவலர்களோ அல்லது பொது ஜனமோ ஆம்புலன்ஸ் சிவப்பு சுழல் விளக்கோடு கூடிய ஒலிச்சத்தம் கேட்டவுடன் நாம் எச்சூழலில் இருந்தாலும் உடனடியாக அவ்வாகனத்திற்கு
வழி விடுவது வாடிக்கை, காரணம் மனித உயிரின் மதிப்பறிந்தவர்களாக நாம் வளர்த்தெடுக்கப்பட்டோம். ஆனால் இன்றோ ஆம்புலன்ஸ் வாகனத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழல் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது பிரச்சார வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டப் பொழுது ஓரிடத்தில் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் சாலையை கடக்க முற்பட்டப் பொழுது ஆம்புலன்ஸ் வாகனத்தை குறித்து விமர்சித்து, அவ்வாகன ஓட்டியை மிகக் கடுமையாக எச்சரித்தார். இதை தொடர்ந்து அவருடைய தொடர் சுற்றுப்பயணத்திற்கிடையே அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் அதிமுகவின் தொண்டர்களால் தாக்கப்பட்டார்கள் என்றச்செய்தியினை தினசரி பத்திரிக்கை வாயிலாகவும் தொலைகாட்சியின் செய்தி வாயிலாகவும் பார்த்தோம். கடந்து சில தினங்களுக்கு முன்னர் திருவாளர் விஜய் அவர்களின் சுற்றுப்பயண கூட்டம் கரூரில் நடைப்பெற்றது. அந்த கூட்ட நெரிச்சலில் சிக்கி 41 பேர் அகால மரணம் அடைந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அச்சமயத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் அந்த கூட்டநெரிச்சலில் ஒரு பெண் தனது ஆடைகள் களைந்து விட தனது மேல்ச்சட்டையை கழற்றிக்கொடுத்து அப்பெண்ணின் மானத்தை காப்பாற்றியதும் அன்றி மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்த அந்த நபரும் தாக்கப்படுகிறார் என்றால் நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குகிறோம் என்று யோசிக்க வேண்டாமா? அங்கே எடப்பாடி அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விமர்சிக்கிறார் இங்கே கரூரில் விஜய் அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை விம்சிக்கிறார். உண்மை இருப்பின் எவரும் விமரிசிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் பொறுப்பானவர்கள் செய்த பொறுப்பற்ற செயலால் இன்று உயிர் காக்கும் அவசர ஊர்திக்கு வந்திருக்கும் ஆபத்தை பொது ஜனம் கவனிக்கத் தவறியிருக்கிறது. இதில் அபூர்வமாக விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஒரு பேட்டியில் " இது என்ன மாதிரியான மனநிலை, எங்கள் கூட்டங்களில் கூட ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு அனுப்பியிருக்கிறோம்" என்றார். நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? பொது பயன்பாட்டிற்கான சாலைகளை அரசியல் அக்கட்சியினர் தங்கள் பிரச்சாரத்திற்காக அக்கிரமித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அதன் ஓட்டுனர்களை விமர்சிக்கலாமா? சாலைகளில் நடத்தப்படும் கூட்டங்களால் பொது ஜனம் எவ்வளவு சிரமங்களுக்குளாகிறார்கள் என்று ஏன் எவருமே யோசிப்பதே இல்லை. இது தான் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணமா? கடந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் 8 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் என்றுச் சொல்லி சுமார் 2 மணி நேரம் மொத்த போக்குவரத்தும் சோளிங்கர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை பக்தர்களால் அக்கிரமிக்கப்பட்டு போக்கு வரத்து முற்றிலும் முடங்கியது. அந்த சாலை தான் சித்தூர்- பள்ளிப்பட்டு - திருத்தணி மார்க்கத்திற்காக வாயில், எவ்வளவு மக்கள் தங்கள் சுய வாகனங்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்துக்கொண்டு சிரமப்பட்டார்கள் என்று நான் அறிவேன். ஏன் இதுபோன்ற கூட்டங்கள் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்கிறது. ரோமர்களின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கூட்டங்களுக்கென்ற பிரத்தியேக இடங்களை தேர்வுச் செய்து மேடைகள் அமைத்துக் கொடுத்து பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கருத்து பரிமாற்றம் நடைபெற்றதாக ஏடுகள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்த நவீன காலத்தில் பொது ஜனம் இன்னல்களுக்கு உள்ளாவது அனுமதிக்கமுடியாது. இராணிப்பேட்டையில் சந்தைப்பகுதியில் இது போன்றதொரு பிரத்தியேக கூட்டங்களுக்கென்ற மேடை ஒன்று அமைக்கப்பட்டு பாழாய்ப்போனது தான் மிச்சம். நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.

பேராசையில் விளைந்த பெரும் வினை! சுவி.பாபு T தாமஸ்

 


பேராசையில் விளைந்த பெரும் வினை!

Karur human stampede was a tragedy due to human rights violation. நம் எல்லோருக்கும் பொன் முட்டையிடும் வாத்துக் கதை தெரியும். ஒரு குடியானவன் வளர்த்துவந்த வாத்து அவனுக்கு தினம் ஒரு பொன் முட்டையிட்டு அவன் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்தது. ஆனால் பேராசை கொண்ட அந்த குடியானவன் பெரும் செல்வந்தனாக விரும்பி வாத்தை அறுத்து விட முதலுக்கே மோசம் வந்தது போல் நடிகராக வளர்ந்து அரசியல்வாதியாக பரிணாமிக்கத்துவங்கிய திருவாளர் விஜய் அவர்களின் வாழ்வில் அவர் நினைத்ததற்கு எதிராக அமைந்து விட்டது. தமிழக வெற்றிக் கழகத்தினர் கரூரில் கூட்டம் நடத்த எத்தனித்தப் போதே இதற்கு முன்னால் நடத்திய கூட்டங்களில் திரண்ட கூட்டத்தை குறிப்பால் கணித்து கரூர் கூட்டத்தை பல முனை கூட்டங்களாக குறைந்த பட்சம் 4 அல்லது 5 முக்கிய பகுதிகளாக கணித்து பிரித்து நடத்த முற்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். இதற்கு வாய்ப்பு இல்லை காரணம் இவர்கள் கூட்டம் நடத்துவதே பெருமளவில் கூட்டம் சேர்த்து மாஸ் காட்டுவதே நோக்கமெனில் இதற்கு வாய்ப்பே இல்லை தான். சரி இதையும் மீறி தவெகவினர் செய்த பிழையும் அதனால் விளைந்த வினையும் என்ன வென்று பார்போம். ஒன்று அக் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து அவர்கள் தொண்டர்களுக்குச் கொடுத்த அறிவிப்பு அதாவது கூட்டம் நடத்த தேர்வாகியுள்ள இடத்திற்கு திரு. விஜய் அவர்கள் பிற்பகல் 12. 30 மணி என்று செய்த அறிவிப்பாகும். இதனால் ரசிகர்கள் நேரப்பட சாப்பிட்டும் சாப்பிடாததுமாக வேலுச்சாமிபுறத்தில் குவியத் துவங்கி விட்டனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர், வெயிலுக்கு ஒதுங்க தோதான இடமோ, கழிப்பறை வசதியோ, உணவோ ஏதுமில்லாதப் போது சுமார் 7- 8 மணி நேரம் கால் கடுக்க நின்றால் என்னவாகும்? நல்ல திடகாத்திரமான வாலிபர்களுக்கே இச்சூழல் சாத்தியமில்லாதப்போது குழந்தைகள், சிறுபிள்ளைகள், பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். ஆனால் இங்கே ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை, அதாவது மின்விசிறி அமைத்துக் கொடுத்து, இருக்கைகள் கொடுத்து, குடிதண்ணீர் வசதி, கழிப்பறை வசதி எல்லாம் அமைத்துக் கொடுத்து அழைத்தால் யாரும் வருவதில்லை. ஆனால் இங்கு மட்டும் வெயில் உஷ்ணம் என்றும் பாராமல் கால் கடுக்க நின்றார்கள் என்றால் அது அவர்களுக்கே வெளிச்சம். இரண்டாவதாக, கூட்டம் கட்டுக் கடங்காமல் சாலையின் இரு புறமும் நிரம்பி வழிய கூட்டத்திற்குள் விஜய் அவர்களின் பிரச்சாரப்பேருந்து நுழைக்கப் பட்டிருக்கிறதே இது எப்படி? அவ்வாறு நுழையலாமா? அப்படி நுழைந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சிந்தித்திருக்க வேண்டும் அல்லது திருவாளர் விஜய் அவர்கள் யோசித்திருக்க வேண்டும். அதை செய்யாமல் நான் தவறேதும் செய்யவில்லை என்று சொல்லுவது எப்படி? இத்துணை பெரிய மனித உரிமை மீறல் நடந்திருக்க மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தில் விசாரணையை ஆரம்பிக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்து நியாயமா? என்று நாம் அனைவரும் சிந்துத்துப் பார்க்கவேண்டும். ஆனால் இத்தனை கோரத்திற்குப் பிறகும் விஜய் அவர்களின் பின்னால் நிற்க அழைப்புக் கொடுக்க துணியும் நபர்களை நாம் என்ன வென்று சொல்ல... குறைந்தப் பட்ச மனித நேயம் உள்ளவர்கள் எவரும் அவ்வாறு செய்யவே மாட்டார்கள். நல் வாய்ப்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை முற்றுப் பெற்று அவர்தம் வீடுகள் திரும்பியிருக்கிறார்கள். அவ்வாறே மற்றவர்களும் நலமுடன் தங்கள் வீடுகள் திரும்ப பிரார்த்திப்போம். நன்றி, வணக்கம்
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu.

Train your followers!

 Dear Mr. Vijai, Actor turned Politician,


ஒரு நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி புகழின் உச்சியில் இருக்கும் பிரபல நடிகராக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் அன்புக்குரிய விஜய் அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்துக்களும் பல. சகோதரர் விஜய் அவர்களே, உங்கள் பிரபலத்தன்மையின் நிமித்தம் மிகப் பெரிய கூட்டம் உங்கள் பின்னால் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்க முடியாது என்பது உண்மையே. எனினும் இந்த கூட்டத்தை முதலீடாகக் கொண்டு அரசியல் பிரவேசம் செய்து விடலாம் என்று நீங்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்களை கண்முடித்தனமாக நம்பும் இந்த பாமர மக்களுக்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா? இங்கே ஒரு வரலாற்று உண்மையை நினைவுப் படுத்த விரும்புகிறேன். சற்றேரக் குறைய நன்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இன்றைய இங்கிலாந்து நாட்டில் தொழில் புரட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் சுமார் 75 % மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழிருந்து சொற்ப வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இந்த ஜனக்கூட்டத்தில் வெளிநாடுகளிலிருந்தும் பிழைப்புத் தேடி பலர் வந்து கஷ்ட ஜீவியம் மேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். இவர்களின் பிள்ளைகளோ தறிக்கெட்டு கட்டுக்கு அடங்காமல் தங்களுக்குத் தோன்றியதை நலமென்று நம்பி வளர்ந்து வந்தார்கள். இதை கண்ணுற்ற பத்திரிகையாளர் Robert Raixs என்பவரும் அவரது நண்பருமான Thomas Stalk என்பவரும் இணைந்து அரும் பாடுகள் பல பட்டு ஒழுங்கு, ஒழுக்கம், நற்பண்பு போன்ற நல்லொழுக்க நெறிகளை போதிக்கத்துவங்கி சுமார் 50 ஆண்டுகளில் வெற்றியும் கண்டார்கள். நாம் பெரும்பாலும் எல்லா வெள்ளைக்காரர்களையும் துரைகள் என்று சொல்லுவதில்லை இங்கிலாந்து நாட்டவர்களைத் தவிர காரணம் அவர்களின் நேரம் தவறாமை, சொல்லிலும் செயலிலும் நேர்மை, ஒழுக்கம் போன்ற காரணங்களே அடிப்படையாகும். இதற்கு மூலக் காரணமாக அமைந்தது Robert Raixs மற்றும் Thomas Stalk இணைத்து நடத்திய 7125 பயிற்சிப்பட்டறைகள் என்பதும் இவர்களில் 4 பேரில் 3 பேர் இவர்களின் பயிற்சிப் பட்டறையில் பயின்று வளர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மையாகும். இதனால் நடத்துனர் இல்லாத பேருந்துகள், மால்களில் தாங்களாகவே முன்வந்து உரிய பயணம் செலுத்தி தங்கள் நேர்மையை பறைசாற்றி வந்தனர்.
எனவே தாங்களும் இத்துப்போன்ற முயற்சியை மேற்க்கொண்டால் ஒரு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும் என்று ஆழமாக நம்புகிறோம். கரூர் தள்ளு முள்ளில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்கள் என்பது வரலாற்றில் ஒருக்காலும் அழிக்க முடியாத கரும் புள்ளியாகும். இதற்காக அடுத்தவர் மீது பழியை சுமத்தி தப்பிக்கப் பார்ப்பது பேடித்தனமாகும். நடந்தது நடந்தது தான், அந்த வடுவை மேலும் ரணமாக்காமல், இதன் மூலம் பாடங்களை கற்றுக்கொண்டு ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல் பட்டு வெல்வது தான் முதிர்ச்சி.
நன்றி, வணக்கம்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation, Ranipet - 632 401. https://ourshepherdsvoicefoundation,blogspot.com

God's grace!