பெயர் காரணம் அல்லது காரணப்பெயர்! சுவி. பாபு T தாமஸ்
நம்முடைய பகுதிகளில் வசிக்கும் நபர்களின் பெயர்களை வைத்து அவர் யார்? எந்த சமயத்தை சார்ந்தவர் என்று சொல்லிவிட முடியும். இன்னும் ஒரு படி மேலே போய், ஒருவரின் வசிப்பிடத்தை வைத்து அவர் இன்னார் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய கலாச்சாரம் இருப்பது வியப்பே. குறிப்பாக ஒருவரின் பெயர் மாரியம்மா என்றதுமே அவர் இந்து என்றும், ஒருவரின் பெயர் மேரி என தெரிந்ததும் அவர் கிறிஸ்தவர் என்றும், ஒருவரின் பெயர் மிரியம் என்ற உடன் அவர் இஸ்லாமியர் என்று அறிந்துக் கொள்ளுமளவுக்கு நாம் அறிவு ஜீவிகள் என்பது பெருமைக் குரிய விஷயமே. எனினும் பரிசுத்த வேதாகமம் இது குறித்து நமக்கு சொல்லுவது என்ன என்பதை சற்றே கவனிப்போம். முதலில் பரிசுத்த வேதாகமம் என்பது ஒரு பொது மறை நூல், அது கிறிஸ்தவர்களுக்கான நூலோ அல்லது அவர்கள் மட்டுமே பயன் படுத்த வேண்டிய சமய நூல் என்று நினைப்பதே தவறானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவானவர் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடவுளும் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
வான் தூதர்கள் அல்லது தேவ தூதர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மனு மக்களுக்கு எப்படி? என்ன சொல்லி அறிவித்தார்கள் என்று பாப்போம். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா : 2 : 10-14 அப்படியானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லா மக்களுக்காக இந்த பூமியில் அவதரித்தார் என்பது தான் உண்மை. ஆகவே தான் அவரை நாம் உலக இரட்சகர் என்று போற்றுகிறோம். இங்கே நம் பூமியில் காணப்படும் சமய பிரிவுகளெல்லாம் மனித மூளையில் ஏற்பட்ட கோளாறினால் பிறப்பிக்கப்பட்டவை என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பிரிவுகளையும், பிளவுகளையும் கர்த்தர் எக்காலத்திலும் அனுமதிப்பதே இல்லை. அப்படியே பெயர் பிரிவினைகளும் மனிதன் உண்டாக்கிக் கொண்டதே ஒழிய கடவுளால் உண்டானது அல்ல. எனினும் பரிசுத்த வேதாகமம் பெயர்களை குறித்து சொல்லுவதை தெளிவாகப் பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு : 1 :18,21 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இயேசு என்கிற பெயர் ஏன் அமையப்பெற்றது என்றால் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதே. அப்படியானால் இயேசு என்பது ஒரு காரணப்பெயர். இப்படித் தான் பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் எல்லாப்பெயர்களும், அதாவது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையில் காணப்படும் எல்லாப்பெயர்களும் காரணப் பெயர்களே. சரி இன்னும் சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்.
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. ஆதியாகமம் : 16 : 11 ஆகார் எனும் எகிப்திய தேசத்து பெண் ஆபிரகாமின் மனைவி என்கிற அந்தஸ்தோடு கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெற சமயம் கூடி வரும் வேளையில், கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக என்று கூறுகிறார். அப்படியானால் இஸ்மவேல் என்பதும் ஒரு காரணப் பெயரே. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் : 17 :1 - 5 ஆக அபிராமாய் இருந்த ஆபிரகாமை ஆபிரகாமாக மாற்றியதற்கு பின்னால் இருப்பதும் ஒரு காரணமே. ஆகவே இதுவும் ஒரு காரணப் பெயரே.
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். யாத்திராகமம் : 2 :1 - 10 இங்கேயும் மோசே என்கிற பெயருக்கு பின்னல் ஒரு காரணம் இருக்கிறது. ஆகவே இதுவும் ஒரு காரணப் பெயரே.
இன்னும் பிற காரணப் பெயர்களின் சில உங்கள் பார்வைக்கு. சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். I சாமுவேல் : 1 : 20 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். I சாமுவேல் : 4 : 19 - 21 யோவான் ஸ்நானகன் : தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். யோவான் என்கிற பெயருக்கான பொருள் சந்தோஷம் - மகிழ்ச்சி. எந்த மகிழ்ச்சியை யோவானுக்கு பெயராக வைக்கப்பட்டதென்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சந்தோஷத்தையே பெயராக யோவானுக்கு சூட்டப்பட்டது என்பதே பெயர் காரணத்தின் சிறப்பு.
இது தான் பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லும் உண்மையும், நடைமுறையாகும். ஆனால் நாம் கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு நாம் செய்யும் பித்தலாட்டங்கள் மிகக் கொடுமையானது. எப்படியெனில், எப்படி பாபிலோனுக்கு சிறைகளாக கொண்டு போன யூதர்களை பாபிலோனிய முறையில் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டதோ, அதே முறையை நாமும் பின்பற்றுவது கொடுமையில்லையா? அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். தானியேல் : 1 : 6 - 7 இதில் இன்னும் மேலே போய் சாத்ராக், மேஷாக் என்கிற பாபிலோனிய பேர்களையே தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கும் கிறிஸ்தவர்களை என்னவென்று சொல்லுவது. நாம் நம் பிள்ளைகளுக்கு இஸ்மவேல் என்கிற பேரை வைக்க மாட்டோம், ஒன்று அது இஸ்லாமியர்களின் பெயர் வகையறாவை சேர்ந்தது. மற்றொரு காரணம் பெயருக்கு பின்னல் வேல் வருவதால் அது இந்து என்ற தோற்றத்தை தருமாதலால் நாம் தவிர்ப்போம். இன்னொரு கொடுமை தான் கொடியது, அதாவது Antony, George, Xavier, Francis போன்ற பெயர்கள் கத்தோலிக்க திருச்சபை பெயர்களாதலால் சீர்திருத்த திருச்சபையை சார்ந்தவர்கள் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
கிறிஸ்தவமே மனம்திரும்பு, சத்திய வசனத்திற்கு நேராய் உடனே திரும்பு. நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா : 1 : 19 - 20 அது தான் 2020 கொள்ளை நோய் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுவதில்லை, ஆமென்.
Evg.Babu T Thomas, Our Shepherd's Voice Foundation,
Ranipet - 632 401, Tamil Nadu, South India.






